வட,கிழக்கிற்கு வழங்கவிருந்த கூடுதல் அதிகாரங்களை ஜே.ஆரே நீக்கினார் – ப.சிதம்பரம்
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான, ப.சிதம்பரம், நேற்று யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
முதலமைச்சரின் இல்லத்தில் சுமார் அரை மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதுகுறித்து, சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,
“இந்தச் சந்திப்பில் பல விடயங்களையும் நாம் பேசிக் கொண்டோம். முக்கியமாக ஒரு கருத்து அவரால் கூறப்பட்டது. அக்கருத்து ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தது. மறுபுறத்தில் ஏமாற்றமாகவும் இருந்தது.
1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்பாடு எழுதப்பட்டபோது அவரும் பாலகிருஸ்ணன் என்ற மூத்தசட்டத்தரணியும் இணைந்து பல மணித்தியாலங்களாக உடன்பாட்டு வரைவை மேற்கொண்டதாக கூறினர். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் எவ்வாறு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோ, அதுபோல,வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலேயே, உடன்பாட்டு வரைவு தயாரிக்கப்பட்டதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஆனால், அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன வட-கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மாற்றியமைத்து நாட்டின் சகல மாகாணங்களுக்கும் ஒரே மாதிரி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
1992 ஆம் ஆண்டு இலங்கை- இந்திய உடன்பாட்டில், தரப்பட்ட அதிகாரம் குறைக்கப்பட்டது தொடர்பாக அவரிடம்கூறினேன். அரசாங்க அதிபர், பிரதேச செயலக அதிகாரிகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டமை மற்றும் மகாவலி அதிகாரசபை அத்துடன் ஏனைய அதிகார சபைகள் உருவாக்கப்பட்டு மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் பறிக்கப்பட்டமை. என்பவற்றை கூறினேன்.
அத்துடன் தோன்றித்தனமாக மத்திய அரசால் பல்வேறு வழிகளிலும் அதிகாரங்கள் பறிக்கப்படுவதையும் அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினேன்அதற்கு அவர் இதுதொடர்பில் நீங்கள் உங்களுடைய மத்திய அரசுடன் பேசி தீர்க்கவேண்டும் எனவும் குறித்த விடயங்கள் தொடர்பில் மத்திய அரசிற்கு எடுத்துக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை முதலமைச்சருடனான சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இந்தியாவின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்,கொழும்பில் கணக்காளர் சங்கத்தின் ஆண்டு விழாவுக்கு வருகை தந்தேன். இதன்பின்னர் ஒரு நாள் அவகாசம் எனக்கு கிடைத்தது.
இதனை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தின் நிலவரங்களை அறிய வந்தேன்.இங்கு வந்தபோது வடக்கு முதலமைச்சரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் பொதுவாக பேசிக் கொண்டோம்.அதற்கமைய மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் என்னென்ன பிரச்சினைகள் தற்போது காணப்படுகின்றன என்பது தொடர்பில் கலந்துரையாடினோம்.
வடமாகாண முதலமைச்சர் பாரிய அனுபவமுடையவராக இருக்கிறார். மிகுந்த நிதானத்தோடும் அனுபவத்தோடும் செயற்படுகிறார் என்பதை அவருடைய கலந்துரையாடல் மூலம் அறிய முடிந்தது.இப்பகுதி மக்களின் நல்வாழ்விற்காக எங்களால் இயன்ற உதவிகளை வழங்குவோம் என்று அவரிடம் கூறினேன் எனத் தெரிவித்தார்.