தெரிவு செய்யப்படும் பொறிமுறை இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவானதாக இருக்கும்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஒரு பொறிமுறையைத் தாபிப்பதற்கு சகல கட்சிகளினதும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்மொழியப்படும் பொறிமுறை நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைவானதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய முன்மொழிவுகள் தொடர்பில் 22ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இலங்கையின் அரசியல்யாப்பு சட்டகத்திற்குள் நின்று ஜெனீவா முன்மொழிவுகளுக்கு பொருத்தமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜெனீவா முன்மொழிவுகளுக்கு இலங்கை அரசாங்கம் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்குமாறும் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மனித உரிமைகளையும் உண்மையையும் நீதியையும் மதிக்கும் ஒரு இறைமையுள்ள ஜனநாயக தேசம் என்றவகையில் இலங்கை இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடவும் மேலும் பல சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டங்களை ஒழுங்கு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
2012 மார்ச்சு 22, 2013 மார்ச்சு 21, 2014 மார்ச 27 இல் வெளியான தீர்மானங்களோடு ஒப்பிடுகின்றபோது தற்போதைய தீர்மானம் அதன் உள்ளடக்கத்தில் வேறுபட்டதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது அவசியமானதாகும் என்றும் தெரிவித்தார். இந்த தீர்மானம் தொடர்பில எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தங்களது கருத்துக்களை இரண்டுவார காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்துமூலம் முன்வைக்குமாறும் ஜனாதிபதி அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டார்.
தாம் ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கப்போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, தெரிவுசெய்யப்படும் பொறிமுறை அரசியலமைப்புக்கு அமைவாக இருக்க வேண்டும் என்பதோடு, மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய முன்னொழிவுகளையும் இதற்கு முன்னுள்ள முன்மொழிவுகளையும் ஒப்பிடுகின்றபோது தற்போதைய தீர்மானம் மனித உரிமைகள் குற்;றச்சாட்டுக்களை நீர்த்துப்போகச் செய்தள்ளமையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இரண்டு மணித்தியாலமாக நடைபெற்ற நடைபெற்ற இந்த நீண்ட கலந்துரையாடல் ஒரு சர்வதேச போர்க்குற்ற விசாரணை பொறிமுறையைத் தாபிப்பது தொடர்பாக தங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கு அரசியல்கட்சிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, பிவித்துரு ஹெலஉருமய, ஜாதிக ஹெலஉறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மஹஜன எக்சத் பெரமுண, தேசிய சுதந்திர முன்னணி, மற்றும் ஜனநாயகக் கட்சி உட்பட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம். ஜனநாயக முன்னணியின் தலைவர் மநோ கணேசன், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன அமைச்சர்களான சம்பிக ரணவக்க, நிமல் சிறிபால த சில்வா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.