Breaking News

யுத்தக் குற்ற இராணுவத்தினரை பாதுகாக்க அரசியல் கைதிகள் பகடைக்காய்களா?



யுத்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட இராணுவத் தளபதிகளை பாதுகாக்கும் முனைப்புடனேயே தமிழ் அரசியல் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசியல் கைதிகள் பிணையிலேயே விடுதலை செய்யப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. அதன்மூலம் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்பதே புலப்படுகிறது.

இலங்கையில், பொதுமன்னிப்பு வழங்கப்படுவது என்பது புதிய விடயமல்ல. இந்நிலையில், இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு பின்னிற்பதற்கான காரணம், இராணுவத் தளபதிகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் பொருட்டு பேரம் பேசும் நடவடிக்கைக்காக, அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.