Breaking News

ஆப்கானிஸ்தானில் வைத்தியசாலை மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் - 9 வைத்தியர்கள் பலி!

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரில் உள்ள வைத்தியசாலை மீது அமெரிக்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கடந்த மருத்துவ சேவகர்கள் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த 9 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் நகருக்குள் கடந்த திங்கட்கிழமை ஊடுருவிய தலிபான்கள், திடீர் தாக்குதல் நடத்தி நகர் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து, நேட்டோ எனப்படும் சர்வதேச இராணுவத்தின் உதவியுடன் ஆப்கன் பாதுகாப்பு படையினர் தலிபான்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி நகரை மீட்டனர்.

இந்நிலையில், தலிபான்களை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் போர்விமானங்கள் மூலம் குண்டுமழை பெய்துவரும் அமெரிக்க விமானப்படை நேற்று குந்தூஸ் நகரின் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. தலிபான்களின் பதுங்குமிடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலின்போது, அமெரிக்க போர் விமானம் வீசிய குண்டுகளில் ஒன்று குந்தூஸ் நகரில் உள்ள வைத்தியசாலையின் மீது விழுந்தது. இதில் 3 வைத்தியர்கள் மற்றும் எல்லை கடந்த மருத்துவ சேவகர்கள் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த ஆறுபேர் என மொத்தம் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், எல்லை கடந்த மருத்துவ சேவகர்கள் தொண்டு அமைப்பை சேர்ந்த 24 தன்னார்வலர்கள் மற்றும் வைத்தியசாலையில் இருந்த 13 நோயாளிகள் என மொத்தம் 37 பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக ஆப்கானிஸ்தான் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல் நடந்தபோது அந்த வைத்தியசாலையில் 105 நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் தங்கியிருந்ததாக மருத்துவ குறிப்புகளில் காணப்படுகின்றது.