Breaking News

பரணகம ஆணைக்குழுவை கலைக்க வேண்டும்!


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான – காணாமற்போனோர் குறித்து விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்றும் அதனைக் கலைக்க வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

ஜெனிவாவில் நேற்று நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை குறித்த விவாதத்தில் காணொளி மூலம் உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

காணாமற்போனோர் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இன்னமுமும் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அதன் நம்பகத்தன்மை மற்றும் செயற்திறன் தொடர்பான பரவலான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம். அதன் எஞ்சியுள்ள விசாரணைகள், காணாமற் போனோரின் குடும்பங்களுடன் கலந்தாலோசித்து அமைக்கப்படும் நம்பகமான, சுதந்திரமான அமைப்பு ஒன்றிடம் கையளிக்கப்பட வேண்டும்” என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட இந்த ஆணைக்குழுவுக்கு உதவுவதற்கு சேர். டெஸ்மன்ட் டி சில்வா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களையும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரிக்கும் வகையிலும் இந்த ஆணைக்குழுவின் அதிகார எல்லை மகிந்த ராஜபக்சவினால் விரிவுபடுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.