இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆன்ம பரிசோதனை – ‘தி இந்து’ ஆசிரியர் தலையங்கம்
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுவிட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.
சர்வதேசங்களின் முடிவானது, அடிப்படையில் அந்தந்த நாடுகளின் ராஜீய நலன்களையும் கணக்குகளையுமே பிரதானமாகக் கொண்டு எடுக்கப்படுபவையே என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.இலங்கையின் அரசியல் தலைமையும் ராணுவத் தலைமையும் செயல் பட்ட விதம் தொடர்பாகத் தமிழ்ச் சமூகம் தொடர்ந்து சர்வதேச விசாரணைக்காகக் குரல் கொடுத்து வந்தாலும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசும் பிரதான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்தேவந்தன.
ராஜபக்ச அரசின்வீழ்ச்சிக்குப் பிறகு, இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் ஒருமித்த குரலோடு பேசும் சூழலில், எது இப்போதைக்கு ஓரளவேனும் சாத்தியமோ, அதையே முடிவாக முன்மொழிந்திருக்கின்றது சர்வதேசச் சமூகம்.போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானம், இலங்கையின் ஒப்புதல் பெற்று, வாக்கெடுப்பில் இலங்கையையும் கலந்துகொள்ள வைத்த பிறகே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போரினாலும் மனித உரிமைச் செயல்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு – அதிலும் குறிப்பாக உள்நாட்டுப் போரின் இறுதிப் பகுதியில் நடந்த அக்கிரமங்களுக்கு – நீதி வழங்கப்பட வேண்டும்; பாதகங்களைச் செய்ய உத்தரவிட்டவர்கள் முதற்கொண்டு அதைச் செய்தவர்கள் வரையில் அனைவரும் அவரவர் தவறுகளுக்கு ஏற்பத் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்; சிறுபான்மை இனத்தவருக்கு அனைத்து அரசியல் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்; அதிகாரப் பகிர்வு நடந்தேற வேண்டும்; அரசு நிர்வாக அமைப்பே பாரபட்சமற்ற ஆட்சியை வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும் சர்வதேசத்தின் விருப்பங்களின் தொனி தீர்மானத்தில் ஒலிக்கிறது.
போருக்கு மிகப் பெரிய விலை கொடுத்த தமிழ்ச் சமூகத்துக்கு இது பெரும் ஏமாற்றம் தரக்கூடியது என்றாலும், இந்தத் தீர்மானப்படி ஒரு நியாயமான விசாரணை நடப்பதேகூட அத்தனை சாதாரணமான காரியம் இல்லை என்பதுதான் இலங்கையின் கள யதார்த்தம்.அதேசமயம், ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்திருக்கும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு, சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுக்க நிச்சயம் இது ஒரு நல்ல வாய்ப்பு.
மனித உரிமைகள் சட்டத்தை மீறியதான விசாரணை என்பது, விசாரணைக்குப் பிறகு இரு இனக் குழுக்களும் சமரசமாகப் போவதற்கு நல்லதொரு வாய்ப்பு. நடந்த உண்மைகளை இருதரப்பும் அறியவும், இனி இப்படியொரு மோதல்கள் நிகழாத வண்ணம் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவும் இந்த விசாரணை வழிவகுக்கக்கூடும்.அத்துடன் அரசியல் தீர்வு ஏற்படவும் இது உதவும். இலங்கை ஆட்சியாளர்கள் நியாயமான ஒரு விசாரணைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் பெறத்தக்க விதத்தில் விசாரணை நீதிபதியும், வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களால் பாதி்க்கப்பட்டவர்கள் அச்சமோ, தயக்கமோ இல்லாமல் தங்களுடைய புகார்களை முன்வந்து கூறி, சட்டப்படி பரிகாரம் தேடத்தக்க வகையில் விசாரணை நடைமுறைகள் அமைய வேண்டும்.தம்முடைய நாட்டின் எல்லாச் சமூகங்களையும் சமமாகவே பாவிக்கிறது என்றால், இந்த விசாரணையை ஓர் ஆன்ம பரிசோதனையாக இலங்கை அரசு கருத வேண்டும்!