அரசியல் கைதிகள் விவகாரம்: ரணில் தலைமையில் நாளை விசேட கூட்டம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மேற்படி விசேட கூட்டத்தில் சிறைச்சாலைகள் அமைச்சர், சிறைச்சாலைகள் ஆணையாளர், சட்டமா அதிபர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்களையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்களையும் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபரிடம் பிரதமர் ரணில் கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே நாளை (திங்கள் கிழமை) விசேட கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல வருடங்களாக எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை அண்மையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.