புலிகள் தோற்கடிக்கப்படுவதையே இந்தியா விரும்பியது - எரிக் சொல்ஹெய்ம்
தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைவதையே இந்தியா விரும்பியதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான ஆரம்பகால அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த இந்தியா, போரின் இறுதித் தருணங்களில் இலங்கை இராணுவம் வெற்றியடையும் வாய்ப்பு அதிகரித்தவுடன் விடுதலைப் புலிகளின் அழிவை எதிர்பார்த்து காத்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறைவடைவதற்கு பல மாதங்கள் முன்பு வரை இராணுவ ரீதியான வெற்றி சாத்தியம் இல்லை என இந்தியா நம்பியிருந்தமையால், அமைதி நடவடிக்கைகளுக்கு பலமான ஆதரவை அளித்துவந்த போதிலும், இறுதிப் போரின் கடைசி சில மாதங்களில் இலங்கை அரசு வெற்றிபெறும் என இந்தியா எதிர்பார்த்ததாகவும், அதனால் அமைதிக்கான அதன் ஆதரவுகளில் மாற்றம் ஏற்பட தொடங்கியதாகவும் அவர் விபரித்துள்ளார்.
மோதல்கள் உக்கிரமடைந்த நிலையிலும் அவர்களது விழிகளில் புலிகளுக்காக கண்ணீர் வரவில்லை எனவும், மாறாக விடுதலைப்புலிகளின் அழிவை இந்தியா முன்னதாகவே ஊகித்து வைத்திருந்தது எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானமானது, இலங்கைக்கு சாதகமான நடவடிக்கை என்றே நம்புவதாகவும், அந்த தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ள அவர், ஏனென்றால் இதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தீர்மானங்கள் சரிவர தமது கடமையை நிறை வேற்றாததால் மக்களிடையே அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பதையும் சுடடிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீர்மானத்தினால் மாத்திரம் இலங்கையின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னொரு பக்கம் பொருளாதார மற்றும் சமுக மேம்பாட்டுக்கான தேவைகளை கவனிக்க வேண்டிய தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசாங்கம் இந்தப் பிரச்சினையை இராணுவ ரீதியாக கையாண்டதாகவும், விடுதலைப் புலிகளின் பெரும்பாலான தலைவர்களும் தற்போது உயிருடன் இல்லை என முன்னைய அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை சமூகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.