சர்வதேச அமைப்புகளுடனான தொடர்பினை இலங்கை புதுப்பிக்க வேண்டும்: மங்கள
இலங்கை அரசாங்கம் சொந்தக் காலில் நிற்கும் வரை ஏனைய நட்பு நாடுகளின் உதவி என்றும் தேவை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச அமைதி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த வேளையில் உங்களுடன் இணைந்து அமைதி முன்னேற்பாடு குறித்து பேசுவதில் பெருமையடைகிறேன்.
முதல் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சுவிடன் அரசாங்கத்துக்கும் சர்வதேச அமைதி அமைப்புக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
சமரசம், நல்லாட்சி, ஜனநாயகம் ஆகியவை ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றத்தை வழங்கியுள்ளனர்.இதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் எமது நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த வன்முறையும் ஏற்படாமல் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் அமைதியான முறையில் நடந்த தேர்தலாக அமைந்தது.
இந்த இரண்டு தேர்தல்களிலும் அதிகமான ஓட்டுகள் பதிவானது, இலங்கையில் வேறுபாடுகள் அகன்று நீடித்த அமைதி நிலவவேண்டும் என்ற மக்களின் எண்ணங்களை பிரதிபளிக்கிறது.பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடும் வகையில் வளர்ச்சியடைந்த மற்றும் பன்முகத்தன்மையில் பெருமைகொள்ளும் விதத்தில் இலங்கையை உருவாக்குவதே நமது முதன்மை கடமை.
இதன் முதற்கட்டமாக ஐ.நா, ஐ.என்.ஜி.ஓ.க்கள் போன்ற சர்வதேச அமைப்புகளுடனான தொடர்பினை இலங்கை அரசாங்கம் புதுப்பிக்க வேண்டும்.சொந்தக் காலில் நிற்கும் வரை இந்த பயணத்தில் மற்ற நட்பு நாடுகளின் உதவி இலங்கைக்கு என்றும் தேவை. கடந்த காலங்களில் நடைபெற்ற குற்றங்களை ஒப்புக்கொள்ளும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் கடந்த 32 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அமைதி ஏற்படுவது தொடர்பான நடவடிக்கைகள் என்பது வருங்காலத்தில் மோதல்களை தவிர்ப்பதாக மட்டுமல்லாமல் மோதல்களுக்கான வேர்களை கண்டுபிடிப்பதாகவும் இருக்கவேண்டும்.
இந்த மோதல்கள் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டும் நடைபெறுவது அல்ல.இது காலங்களை கடந்தது. நமது நோக்கம் தன்னுள் மற்றும் பிற நாடுகளுடன் அமைதியை பேணும் ஒரு நாட்டை உருவாக்குவது தான்.
ஐ.நா சபையில் கடந்த 60 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளோம். நமது பொறுப்பு அமைதிப்படையை ஏற்படுத்துவதுமட்டுமல்ல, மக்களுக்கு பாதுகாப்பு தருவதும்தான். தடுப்பு, மாற்றம், மேலாண்மை போன்றவற்றில் நாம் ஈடுபடவேண்டும்.
இலங்கையில் உள்ள அரசியல் வேறுபாடுகளுக்கு எவ்வாறு பாலமாக உள்ளோம் என்பதை பற்றி கூறவேண்டும். இந்த மாதம் இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் பல்வேறு சிறிய கட்சிகளை இணைத்து இலங்கையின் தேசிய தன்மைகொண்ட அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அமைதி ஏற்படுவதற்காக நாங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளித்த ஐநாவின் அமைதி குழுவுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இலங்கையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால அமைதி ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இதன் ஒரு கட்டமாக போரின் போது காணாமல் போனவர்கள் ,படுகொலைப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.மேலும் போரின் போது பாதிக்கப்பட்டவர் அவர்கள் இடங்களில் மீண்டும் தங்க வைக்கப்படவும் அவர்கள் நிலங்களை விரைவாக அவர்களிடம் ஒப்படைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலங்களை அவர்களிடம் இன்னும் ஒப்படைக்காமல் இருப்பது வட மாகாணங்களில் பெரிய குறையாகவே உள்ளது. இதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 1000 ஏக்கர் நிலங்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் சீரான முறையில் வளர்ச்சியை மேற்கொள்வதே எங்கள் நோக்கம். எனினும் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட சில காலங்கள் ஆகும். ஆனால் அமைதி ஏற்படுத்துவதில் முக்கிய கருவியாக அது விளங்கும்.எனவே இலங்கையில் உண்மையை கண்டறிவதுன் நீதியை நிலைநாட்டுவது, புணரமைப்பது ஆகியவற்றின் மூலம் இந்த செயல்கள் மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் ஐ.நா., சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் அர்ப்பணிப்போடு செயல்படுவோம் என்பதை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.