ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சி கூட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சிக் குழுக்கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. மாலை 5.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுளளதுடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து ஆராய்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி குழுக்கூட்டத்தை நடத்தவுள்ளார் .
இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள், தொடர்பில் பொதுநலவாய நாடுகளை நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள், வழங்கறிஞர்களை உள்ளடக்கிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரும் பிரேரணை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இம்மாதம் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.
இவ்விடயம் குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காகவே சர்வகட்சிக்குழுக்கூட்டம் கூட்டப்படவுள்ளன. அதாவது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக உள்ளக விசாரணை பொறிமுறையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகவும் அதன் பரிந்துரைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சர்வகட்சி குழுக் கூட்டத்தின் பின்னரே உள்ளக விசாரணை பொறிமுறையை எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பான தேசிய மட்ட கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இவ்வாறு சர்வகட்சி மாநாட்டை நடத்துவதாக கூறியிருந்தார்.
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கைத் தொடர்பான அறிக்கை மற்றும் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பாக விரைவில் சர்வகட்சி மாநாட்டை என்று கூறியிருந்தார்.
மேலும் மேலும் விரைவில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ என அனைத்து மதத்தினரையும் சார்ந்த மாநாட்டை நடத்துவுள்ளதுடன் அவர்களது ஆலேசனைகளை பெற்றுக் கொள்வேன். நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையின் கல்விமான்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தவும், ஆலேசனைகளை பெறவும் உத்தேசித்துள்ளேன் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.