ஜனாதிபதி உறுதிமொழி: அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது
பொதுமன்னிப்பு அளித்து தம்மை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் வழங்கியுள்ள உத்தரவாத்தினைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) மெகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளைப் பார்வையிட்டதுடன், ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பில் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உறுமொழியை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ள அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதியின் உறுதிக்கு அமைய நவம்பர் 7ஆம் திகதி முடிவு கிடைக்கவில்லையாயின் அன்று தொடக்கம் மீண்டும் தமது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதயின் உறுதிமொழிக்கு அமைய நவம்பர் 7 ஆம் திகதி அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின், அவர்களுடன் இணைந்து தாமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமது விடுதலையை வலியுறுத்தி 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 217 அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.