இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜப்பானியப் பிரதமருடன் ரணில் பேச்சு
ஜப்பானுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, நேற்று ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கியோடோவில் நேற்று நடந்த வருடாந்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப சமூக அமைப்பின் கூட்டத்தின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, செயலணிக் குழுவொன்றை நியமிக்க இரு நாட்டுப் பிரதமர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழுவில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம்பெறுவர்.இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே,இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின், வழிகாட்டுதலில், நாடு விரைவில் செழிப்படையும் என்றும், ஆசியப் பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கேந்திரமாக மாறும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைத்ததன் மூலம், உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை சந்திக்கும் அற்றலை இலங்கை அரசாங்கம் பெற்றிருப்பதாக, இலங்கை பிரதமர் தெரிவித்தார். உலகின் எல்லா நாடுகளுடனும், பரஸ்பர உறவுகளைப் பேணுவதே இலங்கையின் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று பிற்பகல் ரோக்கியோ சென்றுள்ள, இலங்கை பிரதமர், இன்று ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அதேவேளை, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேயுடனும் அமைச்சர்களுடனும் நாளை அவர், அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் ஜப்பான் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.