அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணை! மஹிந்த அணி அறிவிப்பு
மைத்திரி– ரணில் கூட்டணி இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதாக எண்ணி இந்த நாட்டை பாரிய நெருக்கடி நிலைமைக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவை இன்னும் சில காலங்களில் உணரக்கூடியதாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சக்திகளுக்கு விலைபோயுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையினூடாக இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகளை கையாண்டு உண்மைகளை கண்டறிவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை நாட்டுக்கும் எமது இராணுவ வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டு எமது இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தினர். அவ்வாறு இருக்கையில் இந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையில் இருந்து நாட்டை விடுவித்துள்ளதாக கூறி அதே விசாரணையை உள்நாட்டில் நடத்த அனுமதி வாங்கி வந்துள்ளது.
இந்த இரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இல்லை. சர்வதேச மட்டத்தில் சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் எமது இராணுவ வீரர்களை விசாரிப்பதை தவிர்த்து அதே விசாரணையை உள்நாட்டில் எமது நீதிமன்றத்தில் மேற்கொள்ளவுள்ளனர். ஆனால் விசாரிப்பவர்கள் தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச பிரதிநிதிகளே இந்த விசாரணைகளையும் மேற்கொள்ளவுள்ளனர். அதற்கான வேலைத்திட்டத்தையே அரசாங்கம் இம்முறை ஐ.நா.வில் கலப்பு நீதிமன்ற முறைமையென ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆகவே இந்த பிரேரணையை இலங்கை தரப்பு ஆதரித்தமை மிகப்பெரிய தவறாகும். அமெரிக்காவை முழுமையாக நம்பி களத்தில் இறங்குவது நமக்கு நாமே புதைகுழியை வெட்டிக்கொண்டமைக்கு சமமானதாகும். அந்தத் தவறினையே இப்போது புதிய அரசாங்கம் செய்துள்ளது. மைத்திரி– ரணில் கூட்டணி இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதாக எண்ணி இந்த நாட்டை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவுகளை இன்னும் சிலகாலங்களில் உணரக்கூடியதாக இருக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேச சக்திகளுக்கு விலைபோயுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையினூடாக இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவினைவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவே முயற்சிக்கின்றனர். அதை நன்கு தெரிந்தும் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒருசில உறுப்பினர்களும் துணைபோவது எமது கட்சிக்கும் எம்மை ஆதரிக்கும் மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். வெளிப்படையாக இந்த துரோகத்தை இவர்கள் செய்வது தொடர்பில் மக்களின் உடனடி பிரதிபலிப்பை வெளிப்படுத்தவேண்டும்.
அதேபோல் இந்த விடயங்கள் தொடர்பில் நாம் நாளை பாராளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் ஏனைய கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தவுள்ளோம். குறித்த இந்த தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு பிரேரணை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளோம். இந்த நாட்டையும் எமது இராணுவத்தையும் நேசிக்கும் பிரதிநிதிகள் கட்சி பேதம் அனைத்தையும் மறந்து அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகளின் தீர்மானம் இந்த நாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தும் அமைதியாக செயற்படுவதால் அது எமது நாட்டையும் மக்களையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். ஆகவே அதற்கு இடமளிக்காது அனைவரும் செயற்பட வேண்டும்.