தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தேசிய அரசாங்கம் ஒருபோதும் தீர்வை வழங்கப்போவதில்லை!
தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தேசிய அரசாங்கம் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொடுக்கப் போவதில்லையென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.
சிறுபான்மை மக்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்தது இஸ்ரேலுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு நேற்று புதன் கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனித்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு 5 ஆசனங்களே தேவையாக இருந்தன. இதற்காக மக்கள் விடுதலை முன்னணி அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இணைத்துக் கொண்டு ஆட்சி அமைத்திருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தது. என்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது என கூறிவருகின்றனர். ஆனால் அது தொடர்பான எந்த வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. அத்துடன் இந்த தேசிய அரசாங்கம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைஒருபோதும் தீர்க்கப்போவதில்லை.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தான் இஸ்ரேலுடன் கூடுதலான தொடர்புகளை வளர்க்கின்றது. தற்போது இஸ்ரேல் கொழும்பில் கோடிக்கணக்கில் பெறுமதிவாய்ந்த காணி ஒன்றை கொள்வனவு செய்து இலங்கை – இஸ்ரேல் நட்புறவு சங்கம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலியர்கள் இந்த நாட்டுக்குள் காலடி வைப்பதென்பது, தூதரகம் அமைப்பது மற்றும் நாட்டுக்குள் ஸ்திரமாகுவதென்பது இந்த நாடு அழிவடைவதற்கான ஆரம்பமாகும்.
இன்று பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களை முழு உலக நாடுகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த நிலைமையில் இருந்து எமது நாட்டை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோன்று அளுத்கம சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களுக்கு சட்டரீதியாக தண்டனை பெற்றுக் கொடுப்பதாகவும் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழு அமைப்பதாகவும் பிரதமர் தேர்தல் காலங்களில் கூறிவந்தார். ஆனால் இன்றுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
எனவே அமைந்துள்ள இந்த தேசிய அரசாங்கம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஒரு போதும் தீர்த்துவைக்கப் போவதில்லை. அது தொடர்பான எந்த வேலைத்திட்டத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. அத்துடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தும் கலாசாரம் உருவாகாமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.