Breaking News

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கான கவனயீர்ப்புப் போராட்டம் நாளை

வடக்கு மாகாணத்திலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை கிண்ணியா, அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் நாளை இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகிய இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்தீகரிப்புக்கு உள்ளாகினர். இவர்கள் தங்களது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இற்றைக்கு 25 வருடங்கள் ஆகின்றன. கால் நூற்றாண்டு காலமாக சொல்லொனா துயரங்களுடன் அம்மக்கள் இன்றும் புத்தளம், குருநாகல், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அகதி எனும் அவல வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.

யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என செய்வதறியாது இருந்த மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் நாட்கள் அருகில் இருக்கின்றது என்கிற நம்பிக்கை பிறந்தது.

இந்நிலையில் அம்மகளின் மீள்குடியேற்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமக்குரிய பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததன் காரணமாக அனைத்து விடயங்களும் ஸ்தம்பித்து காணப்படுகின்றது. இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புதிய அரசியல் சூழ்நிலை வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனயீர்ப்பை பெறுவதற்காக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பும், தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பும் நாடு முழுவதிலுமுள்ள சமூக நல நோக்கம் கொண்ட சிவில் அமைப்புகளும் இணைந்து நாடுதழுவிய கவனயீர்ப்பு, கண்டன ஆர்ப்பாட்டமொன்றை வெள்ளிக்கிழமை (23.10.2015) நடாத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியிலும் மிகவும் ஒழுக்கமான முறையில் முஸ்லிம் சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவண்ணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

அனைவரும் அணி திரண்டு வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்போம். இது இன்றை காலத்தின் முக்கிய தேவையாக இருக்கின்றது. சமூக நலத்தில் அக்கறைகொண்டவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.