புலிகள் தோன்றக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையே – சம்பந்தன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
ஐ.நா விசாரணை அறிக்கை மற்றும் ஜெனிவா தீர்மானம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று உரையாற்றிய அவர், “மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நாம் இன்னும் நீண்ட தூரத்துக்கு பயணிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஜெனிவா தீர்மானத்தை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என்பதுடன் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. போரினாலும், போர்க் காரணங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்களும் நட்ட ஈடுகளும் வழங்கப்பட வேண்டும். அதேபோன்று எமக்கான தீர்வினையும் இதனூடாக பெற்றுக்கொடுப்பதற்கு செயற்படுதல் இன்றியமையாததாக இருக்கிறது.
இவற்றை உறுதிப்படுத்த வேண்டுமானால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமும் அதன் பரிந்துரைகளும் உள்ளவாறு அமுல்படுத்தப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது அவசியமாகிறது. இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளுவதன் அவசியம் மேற்படி தீர்மானத்தால் தெளிவாக குறித்துரைக்கப்பட்டுள்ளது.
முழுமையாக வெளிநாட்டவர்களைக் கொண்ட விசாரணையும் முழுமையாக உள்நாட்டவர்களைக் கொண்ட விசாரணைகளும் பக்கச்சார்பானவையாக அமையலாம் என்பது தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமைக்கு அமைவாக உள்ளன. மற்றும் அனைத்துலக பங்களிப்புடனான விசாரணைகள் வரவேற்கத்தக்கவையாக இருக்கும்.
மக்களிடையே வெறுப்புக்களை ஏற்படுத்தி விடாது அனைத்து தரப்பினரிடத்தும் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இங்கு நான் புலிகளை நியாயப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் மீது இந்தத் தீர்மானத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே அனைத்து விடயங்களும் நியாயபூர்வ விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இறுதிக்கட்ட போரின் போதும் அதன் காரணங்களாலும் பாதிப்புக்குள்ளான அனைத்து தரப்பினருக்கும் நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான உடன்பாடு எட்டப்பட்டு உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி தேசிய பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றையும் பெற்றுக்கொடுப்பதில் அனைத்துக்கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய நிலைமைகளுக்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் ஒரு போதும் பிரிவினைவாதத்தை விரும்பியவர்கள் அல்லர். அதனை நாம் எப்போதும் எதிர்த்துள்ளோம். அதனால் தான் 1970 களில் இடம்பெற்ற தேர்தல்களில் நவரத்தினம் போன்றோர் தோல்வியடைந்து கட்டுப்பணத்தையும் இழக்க நேரிட்டது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமையே ஆகும்.எனவே மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகி விடக் கூடாது” என்று தெரிவித்தார்.