சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை பொறிமுறையே வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
சர்வதேசத்தின் பங்கு மீயுயர்வாக இல்லாத விசாரணையைப் பொறிமுறையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘உடலகம, பரணகம ஆணைக்குழுக்களின் அறிக்கை தொடர்பில் நான் பெரிதும் கரிசனை கொள்ளப் போவதில்லை. இவ்விரண்டு ஆணைக்குழுக்களும் செயற்பட்ட விதம் தொடர்பில் உள்ளூர், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும் எமது கட்சியும் மிகவும் பாரதூரமான விமர்சனங்களை முன் வைத்திருந்தோம்.
எம்மைப் பொறுத்தவரையில் உள்ளகப் பொறிமுறையால் நீதியான விசாரணை நடைபெற முடியாது என்ற அறிக்கையின் முடிவு முக்கியமானது. அத்தோடு குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்துவதும் முக்கியமானது.
ஆகவே, ஐ. நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளவாறு வெறுமனே சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள் இருப்பது மட்டும் போதாது. அவர்கள் பெரும்பான்மையினராக அந்தப் பொறிமுறையில் இருக்க வேண்டும்.
சர்வதேசத்தின் பங்கு மீயுயர்வாக இல்லாத விசாரணையைப் பொறிமுறையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இவ்விடத்தில் உறுதியாக பதிவு செய்ய விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.