அரசியல் கைதிகள் 7ஆம் திகதிக்கு முன் விடுதலை! இன்றேல் கூட்டமைப்பு போராட்டத்தை ஆரம்பிக்கும்
அரசாங்கம் வாக்குறுதி நல்கியது போல் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வில்லையாயின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது போராட்டத்தை உடனேயே ஆரம்பிக்கும் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் அரசாங்கத்தின் எத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடப்பட்டது என்ற பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் அதுபற்றி தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் விளக்குகையில்,
ஜனாதிபதி இரா. சம்பந்தனுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலும் அதேவேளை எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் அவர்களின் ஏகமனதான முடிவின்படி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நவம்பர் 7க்கு முன்னர் நிறைவேற்றப்படுமென நாம் விசுவாசமாக நம்புகின்றோம். அவ்வாறு இல்லையெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நவம்பர் 7 முதல் பாரிய போராட்டத்தில் இறங்கும் என்பது திண்ணம்.
எத்தகையதொரு சூழ்நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான போராட்டத்துக்கு நாம் முன் நிற்போமே தவிர, அது சீர்குலைந்து போக இடம் கொடுக்கமாட்டோம்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்
தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் கடந்த அரசாங்கத்துடன் பல தடவைகள் காத்திரமான பேச்சு வார்த்தைகளை நடாத்தியிருக்கிறோம். குறிப்பாக அமெரிக்க தூதுவர் வீட்டில் வைத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் சகிதம் தலைவர் இரா. சம்பந்தனும் நானும் இது பற்றி கலந்துரையாடி நீதிமன்றினால் தண்டனை கொடுக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பும் ஏனையோருக்கு விடுதலையும் வழங்க வேண்டுமென்று கோரிய போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அதற்கு இணக்கம் தெரிவித்தார். இவ்விடயம் அமெரிக்க தூதுவர் இல்லத்தில் நடந்த விடயமாகும்.
இதன் பின்பு நாம் சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று சகல விபரங்களையும் சேகரித்து உரிய ஒழுங்குகளை மேற்கொண்டு கைதிகளால் கையளிக்கப்பட்ட சகல கடிதங்களையும் முன்னாள் ஜனாதிபதியிடம் கையளித்தோம். கையளித்தது மாத்திரமல்ல மேற்படி கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தோம்.அப்பொழுது முன்னாள் ஜனாதிபதி கூறினார்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கவிருக்கிறேன். அது முடிந்த பின் கைதிகள் விவகாரத்தை நிச்சயம் கவனிப்பேன் என வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் எதையுமே செய்யவில்லை. இத்தகைய பின்னணியில்தான் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின் நாங்கள் அவரைச் சந்தித்த போது எமது முக்கிய கோரிக்கையாக அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் அமைந்தது என்றார்.