வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகளுக்கு நிரந்தர தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி!!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற குழுக்களின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று காலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் முன்வைத்தனர்.குறித்த கோரிக்கைகளை நீதியமைச்சர் உடனடியாக தொலைபேசி ஊடாக சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு பெற்றுத் தருவதாகவும், குறைந்தது 3 வார கால அவகாசம் தேவைப்படுவதாகவும், நவம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் எனவும் சனாதிபதி தெரிவித்ததாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதா, பொது மன்னிப்பளிப்பதா அல்லது வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதா என்பது குறித்து சனாதிபதி தெரிவிக்காத போதிம், அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு அளித்து முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது