பரணகம அறிக்கையை ஏற்கிறோம்! ஐ.நா.அறிக்கையை எதிர்க்கிறோம் - வாசுதேவ நாணயக்கார
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஐ.நா. அறிக்கையை எதிர்க்கின்றோம் எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி. யுமான வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்றத்திற்குள் ஒன்றுபட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டு அரசை பின்னடையச் செய்வோம் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். அதில் கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.அந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் உள்நாட்டில் இடம்பெற்றது. எனவே சம்பவங்களுடன் தொடர்புடையவர்களின் சாட்சியங்களை பெற்றே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சனல் 4 வீடியோ தொடர்பாக இவ் ஆணைக்குழு சார்புத் தன்மையை வெளியிட்டுள்ளது. எனவே இது தொடர்பாக விரிவான வகையிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஆராயப்பட வேண்டும். அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஐ.நா. அறிக்கை முற்றுமுழுதான மிகைப்படுத்தப்பட்ட பொய்யான அறிக்கையாகும்.
அமெரிக்காவின் தேவைக்காக தயாரிக்கப்பட்டதாகும்.இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் அரசியல் பொருளாதார சமூக கலாசார ரீதியில் தலையிடுவதற்காகவும் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்குமாகவே அமெரிக்கா ஐ. நா. ஊடாக அறிக்கையை வெளியிடச் செய்துள்ளதோடு மட்டுமன்றி ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் பிரேரணையையும் நிறைவேற்றியுள்ளது.
இதனை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு அடிபணிந்துள்ளது. ஜே.ஆர். ஜயவர்தனவும் ஐ.தே. கட்சி ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் அடிவருடியாகவே இருந்தார்.
இன்று ஜே. ஆரின் மருமகனான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமெரிக்காவின் அடிவருடியாகவே இருக்கின்றார் என்றார்.