மக்கள் பலத்தினாலேயே 60 வருட போராட்டம் சாத்தியமானது : மாவை
உறுதி, அர்ப்பணிப்பு கொண்ட பலமிக்க மக்களினால் தான், இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களை கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்ததாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், மற்றும் தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கியதான சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில், மாவை சேனாதிராசாவுடன் வடமாகாணசபை உறுப்பினர்களான ஆர்னல்ட் மற்றும் சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசுக் கட்சி வேதனைகளையும், அவதூறுகளையும், குழி பறிப்புக்களையும் சந்தித்து முன்னேறியதாக கூறினார்.
அத்துடன் நடைபெற்றமுடிந்த நடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை, தோற்கடிப்பதற்காக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளால் பெருமளவு பணச்செலவுடன் நவீன தொடர்பாடல் உத்திகளுடன் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், உறுதியும் தெளிவும் மிக்க எம் மக்கள் சரியான முடிவையெடுத்து தமது வாக்குப்பலத்தினால் பொய்மைக்கு முடிவுரை எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, கடந்த தேர்தல் கால படிப்பினைகளில் இருந்து புலம்பெயர் மக்களுக்கும், தாயக தமிழ் தேசிய பிரதிநிதிகளுக்கும் இடையில் நேரடி தொடர்பாடல் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள்.