வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! இலங்கையை கோரியது ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கை அரசாங்கம் தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் நேற்று இடம்பெற்ற இலங்கை குறித்த அமெரிக்க பிரேரணை மீதான விவாதத்தின் போதே மேற்கண்டவாறு அறிவித்து.
அவ்விவாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நாம் வரவேற்பதுடன் மனித உரிமை ஆணையாளருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது நீண்டகால, முரண்பாடான காலப்பகுதியில் இரு தரப்பினரும் குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம் குறித்த அறிக்கை வெளிவருவதற்கு சாட்சியங்கள் பெரும்பங்கை ஆற்றியிருந்தன. அனைத்து இனங்களினதும் சாட்சியங்கள் மனித உரிமை பேரவையின் மீது நம்பிக்கை வைத்து சாட்சியங்களை வழங்கியுள்ளன.
இந்த அறிக்கையானது இலங்கையில் உண்மைகளை கண்டறிவதற்கும்,நீதித்துறையின் செயற்பாட்டிற்கும் பெரும்பங்கு வகிக்குமென எதிர்பார்க்கின்றோம். மக்களுக்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்திருப்பதை வரவேற்கின்றோம். அதனடிப்படையில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
அதேநேரம் இலங்கை அரசாங்கம் நீதித்துறை செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆலோசனைகள், சாட்சியங்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக நம்பிக்கைகளை உடனடியாக கட்டியயெழுப்ப வேண்டும். அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியமானது இலங்கை அரசாங்கம் குறித்த பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கவுள்ளது.