Breaking News

காலிக்கு அப்பாலுள்ள கடலில் இலங்கை கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்

காலிக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில், இலங்கை கொடியுடன் ஆயுதக் கப்பல் ஒன்று இலங்கை கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

காலியில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் வைத்து இந்த ஆயுதக் கப்பல் கைப்பற்றப்பட்டது. இதில், 810 துப்பாக்கிகள் இருந்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகள் முடியும் வரை, காலி துறைமுகத்தில் இந்த கப்பல் தரித்து நிற்கும் என்றும், முதற்கட்டமாக, கப்பலில் உள்ள ஆயுதங்கள் தொடர்பான பதிவுகள் முறையாகப் பேணப்பட்டுள்ளதா, அவற்றுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று விசாரிக்கப்படும் என்றும், இலங்கை கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

கப்பல் மாலுமிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் சில குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், கப்பல் கைப்பற்றப்பட்ட போது உக்ரேனியர் ஒருவரே அதற்குப் பொறுப்பாக இருந்ததாகவும், ஆனால் ஆவணங்களில் இலங்கையர் ஒருவரே கப்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடல்சார் சட்டங்களின்படி, கப்பல் பற்றிய விபரங்களை எமக்குத் தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.ஆயுதக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டதை உறுதிப்படுத்திய, இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இதுபற்றிய விசாரணைகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.