விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் 4 இராணுவத்தினருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை
விசுவமடுவில் பெண் ஒருவரை வல்லுற வுக்குட்படுத்திய, வயோதிப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நான்கு சிறிலங்கா படையினருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு விசுவமடுவில் 27 வயதுடைய, இரண்ட பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, 5 பிள்ளைகளின் தாயாரான யோதிபப் பெண் ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.
குற்றவாளிகளாக காணப்பட்ட, நான்கு இலங்கைப் படையினரில், ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், ஏனைய மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில், குற்றவாளிகளாக காணப்பட்ட பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய இலங்கை படையினர் நால்வரும் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐந்து இலட்சம் ரூபா நட்டுஈடு வழங்கும்படியும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
அதேவேளை, வயோதிப பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகளாக காணப்பட்ட, படையினர் நால்வருக்கும், தலா 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நட்டு ஈடும் வழங்கும்படியும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
உரிய நட்டஈட்டை செலுத்தத் தவறினால், மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளான இலங்கை படையினரின் உறவினர்களும் நேற்று நீதிமன்றத்தில் சமுகமளித்திருந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் நீதிமன்றத்துக்குள் கதறி அழுதனர். ஒருவர் மயங்கி வீழ்ந்தார்.