Breaking News

மஹிந்தவுக்குப் பாராட்டுத் தெரிவித்த ரணில்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் கூச்சலிட்டு நாடாளுமன்றத்தை குழப்பியுள்ளனர். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஜப்பான் விஜயம் பற்றிய விபரங்களை நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பகிர்ந்து கொண்டார். அப்போது இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச அனுபவம் கொண்ட நீதியரசர் ஒருவரைப் பெற்றுத்தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பான் அரசாங்கத்திடம் கடந்த 2014ல் கோரிக்கை வைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.

மஹிந்தவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே மோட்டோ நகுச்சி என்பவரை ஜப்பானிய அரசாங்கம் நியமித்திருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்த தகவலையும் ரணில் நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டார். அத்துடன் அவ்வாறான ஒரு வேண்டுகோளை முன்வைத்திருப்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் தெரிவித்த போது, எதிர்க்கட்சி வரிசை உறுப்பினர்கள் பெரும் கூச்சலிட்டு சபை நடவடிக்கைகளைக் குழப்பினர். உங்கள் தலைவரைப் பாராட்டுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்ற பிரதமரின் கேள்வியை அடுத்து எதிர்க்கட்சியினரின் கூச்சல் அடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.