Breaking News

சிங்கள மக்கள் அனைவருக்கும் சனல் 4 காணொளியை காட்ட வேண்டும்

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிந்து போனமைக்கான காரணம் என்ன? என்ற ஆய் வுகள் இன்னமும் முறைசார்ந்து மேற்கொள்ளப்பட வில்லை. 

இருந்தும் தோல்விக்கான காரணம் என்பதில் எமது தனி நாட்டுக் கொள்கைக்கு அண்டை நாடான இந்தியாவின் எதிர்ப்பு; நீண்டகாலமாக போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றமையால் போராட்ட அமைப்பு களில் இயல்பாக ஏற்படக்கூடிய உடைவுகள்; பிரதேச வாதப் போக்குகள்; காட்டிக் கொடுப்புகள்; விடுதலைப் புலிகளின் கடுமையான தண்டனைகள்; உலக நாடு களை கோபம் அடையச் செய்யக்கூடிய தாக்குதல் முறைகள் போன்றன தமிழர்களின் விடுதலைப் போரா ட்டத்தை தோற்கடித்தன என்று கூறிக்கொள்ளலாம்.

அதிலும் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை தமிழகத்தில் வைத்து கொன்றமை எங்களின் போராட்டத்துக்கு மிகப்பெரிய மாரகச் சனியாக மாறிப் போனது.
இந்தியப் பிரதமரை தமிழகத்தில் வைத்துக் கொன்றதால் தமிழக மக்களும் எங்கள் மீது ஆத்திரமடைய வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

இவை யாவற்றையும் கடந்து விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்திலேயே முழுமையான கவனத்தை செலுத்தினர். அரசியல் பக்கம் குறித்து-அரசியல் இராஜதந்திரம் குறித்து அவர்கள் இம்மியும் கவனம் செலுத்த வில்லை என்ற பலமான குற்றச்சாட்டுகளும் உள்ளன.

எதுவாயினும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும் அவர்களை சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம் அடிமைப்படுத்த நினைப்பது மகாதவறு என்று சிங்கள மக்கள் நினைக்கக்கூடியதாக பிரசாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ளவில்லை என்பது முற்று முழுதான யதார்த்தம்.

இதன் காரணமாக சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று வரை போரினவாத ஊடகங்களில் தமி ழின விரோத பிரசாரங்களையே நம்பி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ் மக்களுக்கு நடந்தது என்ன? எத்தனை ஆயிரம் அப் பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இன்றுவரை தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த மண்ணில் குடியிரு க்க முடியாத அவலங்கள் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புகள் என எதனையும் சிங்கள மக்கள் அறியாத நிலைமைகள் உண்டு.

இந் நிலையில் தமிழ் மக்களின் அவலங்கள் அவர் கள் படும் துன்பங்களை சிங்கள மக்களுக்கு தெரியப் படுத்த; அதற்கான பிரசாரத்தை முன்னெடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் எந்த விதமான நடவடிக்கை யையும் எடுக்கவில்லை.

மாறாக சிங்களப் போரினவாதத்துக்கு துணை நின்று தங்களுக்குப் பதவியை பெறுகின்ற போராசையிலேயே தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் உள்ளன.

அப்பாவித் தமிழ் மக்கள் மத்தியில் தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொள்வது தென்பகுதி ஆட்சி யாளர்களுடன் இரகசிய உடன்பாடுகளைச் செய்வது ஜெனிவாவில் அரசுக்குச் சாதகமாக அறிக்கை விடு வது,இப்படியான சூழ்நிலையில் தமிழ் மக்களின் அவ லத்தை சிங்கள மக்களால் அறிய முடியாது போகின்றது.

நிலைமை இப்படியே தொடருமாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் முன்னெடுக்கப்ப டும் போது சிங்கள மக்கள் மூலமாக அதனை முறிய டிக்க பேரினவாதம் நிச்சயம் முற்படும்.இத்தகையதொரு நிலைமை மீண்டும் ஒரு இனக் கலவரத்தை தோற்றுவிக்கலாம். ஆகையால் தமிழ் மக்கள் பட்ட அவலங்களை சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமாகின்றது.
இதனைச் செய்வதற்கு சனல் 4 காணொளி பேருதவியாக அமையும்.

சனல் 4 காணொளியை அனைத்து சிங்கள மக்களுக்கும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை செய்தாக வேண்டும்.

பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக் குழு சனல் 4 காணொளியில் காட்சிப்படுத்தப்பட்ட சம் பவங்களை பொய் என்று மறுத்து விடாதநிலையில் சனல் 4 காணொளியை தென்பகுதி முழுவதற்கும் காட்சிப்படுத்துவது சிங்கள மக்களுக்கு எங்கள் அவ லத்தை தெரியப்படுத்துவதற்கான ஒரே யுத்தியாகும். இதனையே கெலம் மக்ரே விரும்புகிறார்.

வலம்புரி ஆசிரியர் தலையங்கம்-