ஜனாதிபதி நாளை தாய்லாந்து விஜயம்
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்டுள்ள விழாவில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதைக் குறிக்கும் முகமாகவும் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையிலான சமய உறவுகளைப் பலப்படுத்தும் முகமாகவும் மஹியங்கனை ரஜமஹா விகாரையிலிருந்து புனித தந்தம் எடுத்துச் செல்லப்பட்டு தாய்லாந்து புத்தமொந்தோனில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
நவம்பர் மாதம் 02 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்படும் இந்த நிகழ்வு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹியங்கனை ரஜமஹாவிகாரையின் பிரதம தேரர் உருலவத்தே தம்மரகித தேரர் தலைமையிலான 60 பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவும் தாய்லாந்துக்கான இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளது