Breaking News

இப்பவேனும் புரியுதோ மக்கள் அவர்கள் கெட்டிக்காரர் என்பது

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவை நிராகரித்துள்ளது. 

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக இருந்தால், படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்தில் இருந்து படையினர் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகின்றது.அவ்வாறாயின் அந்தக் குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது சட்டத்தின் கடமை. இருந்தும் சட்டம் அதனைச் செய்யவில்லை.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கேட்கும் அமைச்சர் திலக் மாரப்பனவிடம் எந்த மனச்சாட்சியும் இருப்பதாகத் தெரியவில்லை.மாறாக, சிங்கள இனம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைபட்டு வதைபட வேண்டும். என்பதே அவரின் குறிக்கோளாக இருக்கிறது.

இல்லையயன்றால், பல வருடங்களாக எந்த வித விளக்கம் விசாரணைகளுமின்றி சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் படையினருக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்தி ருக்க மாட்டார்.வன்னிப் பெருநிலப்பரப்பு உட்பட தமிழர் தாயகத்திலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டனர். இந்தக் கொலைகள் அரங்கேறிய முறைகளை அறிந்தால் இதயம் சுக்குநூறாகிப் போகும்.

நிலைமை இதுவாக இருந்த போதிலும் எந்தப் படையினரும் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை.சிறைகளில் இருக்கக்கூடிய படையினர் செய்த குற்றங்கள் அரசுக்கு எதிரானவை. ஆக, போர்க்குற்றத்தின் பெயரால் படைத்தரப்பில் எவரும் கைதாகி சிறையில் இருக்காத நிலையிலும், இனிமேல் நடக்கப்போகின்ற உள்ளக விசாரணையில் குற்றவாளிகளாக படையினர் யாரேனும் இனங்காணப்பட்டால், அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதான மாரப்பனவின் கருத்து, இலங்கையில் பேரினவாதம் இந்த யுகத்திலும் திருந்தாது என்பதையே உணர்த்தி நிற்கிறது

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்த போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இரகசியமான முறையிலேனும் உத்தரவாதத்தினைப் பெற முடியாத எங்கள் தமிழ் அரசியல் தலைமையால், எங் களுக்கு எந்த நன்மையும் இல்லை என்றாகி விட்டது.விடுதலைப்புலிகளின் முக்கிய புள்ளிகளை தமது தரப்புடன் வைத்திருக்கின்ற பேரினவாதம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுப்பதை எடுத்துரைக்க யார் உளர். 

அட, எதிர்க்கட்சித் தலைமையை பெற்றெடுத்த எங்களிடம் இல்லாத இராஜதந்திரம் யாரிடம் உள்ளது.புலியில இருந்த நீங்கள் சிறையில இருந்தால் என்ன? தண்டனை பெற்றால் என்ன? என்ற தமிழ் அரசியல் தலைமையின் நினைப்பில்; எங்கள் பிள்ளைகளுக்கு சிறை, எழுதி வைக்கப்பட்ட ஆதனம். அவ்வளவுதான்.

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம்