ஜனாதிபதி மைத்திரி நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவார் - விக்கினேஸ்வரன் நம்பிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு சௌபாக்கியத்தையும் செழிப்பையும் சமாதானத்தையும் கொண்டுவருவார் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு உள்ளதாக வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016 _ 2018 இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி உதிக்க மனமுவந்து முன் வந்தவர்கள் எம் மக்கள். வெளிப்படையாகவே முன்னாள் ஜனாதிபதி தனது தோல்வி சிறுபான்மையினரால் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருந்தார். எனவே, ஜனாதிபதி பாதுகாப்போடும் மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும்.
பெரும்பான்மையினர் மரமாகவும் சிறுபான்மையினர் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என பலர் மத்தியில் எண்ணப்பாடு இருந்து வந்துள்ளது. ஆனால், வடக்கு, கிழக்கு மக்கள் அதனை ஏற்கவில்லை. ஏற்கவும் முடியாது. காரணம் வடக்கு, கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
எம் மக்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும். அதற்கு இரண்டு மரங்களும் பக்கம் பக்கமாக வளர்வதனையே அதாவது எமது மக்கள் நாட்டில் அந்தந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மை இன மக்களாக வாழவே விரும்புவதாகும்.
இதற்கு எம் மக்கள் மத்தியில் இருக்கின்ற பயம் நீங்க வேண்டும். அவர்கள் நிலையான அமைதியுடன் வாழ வேண்டும் மற்றைய மாகாணங்களில் உள்ள மக்கள் நிலைமை போன்று வடக்கிலும் ஏற்படுத்தப்படவேண்டும்.
அத்துடன் எம் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். மாறாக கடந்த காலங்களில் வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களை அடிமைகள் போன்று வைத்திருக்க விரும்புவது நிறுத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸநாயக்க, விஜயவர்தன, தயா கமகே, விஜித் விஜயமுனி சொய்சா, ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், ஜெயவிக்கிரமபெரேரா, சுவாமிநாதன், அர்ஜுன ரணதுங்க, மகிந்த சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள், வடக்கு மாகாண அவைத் தலைவர் சிவஞானம், வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.