Breaking News

அமெரிக்க அதிகாரி இன்று இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல், இலங்கைக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று தொடக்கம் வரும் 29ஆம் நாள் வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர் இலங்கையில் தங்கியிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், தொழில்முனைவோர், மதத் தலைவர்கள், உள்ளிட்டோரைச் சந்தித்து, பாலினத்தை அடிப்படையாக கொண்ட வன்முறைகள், பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பில் பெண்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட பரந்துபட்ட விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார்.

பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசேல் அம்மையார், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தெற்காசியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இலங்கைக்கும் வரத் திட்டமிட்டிருந்தார்.ஆனால், அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அவரது பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, அந்தப் பயணத்தை இடைநிறுத்தியிருந்தது.

இதனால், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல்கள் ஏற்பட்டிருந்தன.இலங்கை பயணத்தை ரத்துச் செய்த பின்னர், கத்தரின் ருசெல், இணையத் தொழில் நுட்பம் மூலம், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.