மஹிந்தவிற்கு எதிராக சாட்சி கூறும் சமல்!
மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், கடந்த நாடாளுமுன்றத்தின் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறவுள்ளதாகவும், இதன்போது கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தவுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
முன்னதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக செயற்பட்ட சஜின் வாஸ் குணவர்தன மற்றும் துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பிரியத் விக்ரம ஆகியோர் அரசாங்க சாட்சியாளர்களாக மாறியுள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான CSN தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பில் இதுவரையில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிற்கு அமைய, அந்த தொலைக்காட்சி நிறுவனம் ராஜபக்ஷ அறக்கட்டளைக்கு வழங்கிய இடத்தில் நடத்திச் செல்லப்பட்டுள்ளமைக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறக்கட்டளையின் தலைவர் என்ற வகையில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொண்ட FCID யினர் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
விசாரணையின் போது, தனக்கு ஒன்றும் தெரியாது எனவும், அனைத்தும் மஹிந்த ராஜபக்சவும் அவரது புதல்வர்களினாலும் மேற்கொள்ளப்பட்டதென்றும் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் அனுமதியுடன் கடந்த 2003 ஆம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ராஜபக்ஷ அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட இடத்தில், சட்டவிரோதமான முறையில் CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினாலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்ப்டுள்ளன.
இதேவேளை ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனைத் தொடர்ந்து அசவர அவசரமாக ஜனவரி மாதம் 14ஆம் திகதி CSN தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ராஜபக்ஷ அறக்கட்டளைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.