உள்ளக விசாரணையில் நீதி நிச்சயம்! என்கிறது அரசாங்கம்
யுத்தத்தின் போது உயிரிழந்த சிவிலியன்கள் தொடர்பாகவும் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலும் சமாதானத்திற்காக முன்னின்று செயற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்தும் அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறிமுறையில் விசாரிக்கப்படும்.
இந்த உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நிச்சயம் நீதியை பெற்றுக்கொடுப்போம் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு தேவைப்படின் சர்வதேசத்தின் பங்களிப்பையும், சர்வதேசத்தின் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். எமது உள்ளகப் பொறிமுறையானது தென்னாபிரிக்காவில் காணப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவைப் போன்று உயர்ந்த மட்டத்திலும், சர்வதேச தரத்திலும் அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறை என்பன தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ண இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:-
இலங்கையில் 30 வருடகாலமாக யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்பவில்லை. மாறாக யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள், சமாதானத்திற்காக முன்னின்றபோது கொல்லப்பட்ட மக்கள் போன்ற தரப்புக்கள் தொடர்பாகவே பொதுமக்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் எமது அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதான உள்ளக விசாரணை பொறிமுறையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் இந்த இழப்புக்கள் தொடர்பாகவும், மிகவும் விரிவாக ஆராயப்படும்.
இவை தொடர்பில் விசாரித்து நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம். குறிப்பாக எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறையானது சர்வதேச தரத்திற்கு அமைவானதாக இருக்கும்.
தென்னாபிரிக்காவில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்று பரந்து பட்ட ரீதியில் நிறுவப்படும். எமது உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு தேவைப்படின் சர்வதேசத்தின் பங்குபற்றுதலையும் ஏற்றுக்கொள்வோம். அத்துடன் சர்வதேசத்தின் ஆலோசனைகளையும், தொழில்நுட்பட உதவிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொள்ளும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றுவோம். இதேவேளை உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கும் சில இனவாத சக்திகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
ஆனால் அந்த எதிர்ப்புகள் இதுவரை அரசியல்கட்சிகள் ரீதியாக வெளியிடப்படவில்லை. இனவாதிகள், அனைத்துப் பக்கங்களிலும் உள்ளனர். ஆனால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அனைத்துப் பக்கங்களிலும் இருந்த இனவாதிகள் மக்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். எனவே எமது உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்கு இனவாதிகள் ஏற்படுத்தும் தடையை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இதேவேளை உள்ளக பொறிமுறையின் ஒரு அங்கமாக தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
அதற்கான நடவடிக்கைகளையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளும். அரசியல் தீர்வைக் காண்பதற்கான படிமுறைகளையும், இந்த உள்ளகப் பொறிமுறையில் நாங்கள் முன்னெடுக்க விரும்புகின்றோம். நாங்கள் நீண்டகாலமாகவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி வருகின்றோம். எனவே எமது காலத்திலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிட வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.