அகதி மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்! யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
நீண்டகாலமாக அகதி வாழ்க்கை வாழும் மக்களுக்கும், மீளக்குடியேறி அடிப்படை வசதிகளின்றிய மக்களுக்கும் வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட வீமன்காமன் பகுதிக்கு நேற்றைய தினம் விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீண்டகாலத்தின் பின் எமது சொந்த இடத்தில் மீளக்குடியமர்ந்துள்ளோம். ஆனாலும் எமக்கான வாழ்வாதார உதவிகள், தொழில் முயற்சிகள் எதுவும் இங்கு கிடைக்கவில்லை. எமது தொழிலை மேற்கொள்வதற்கான இடங்கள் இன்று வரை விடுவிக்கப்படாமையிலேயே உள்ளனர் என சந்திப்பின்போது மக்கள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், குறித்த பிரச்சினை தொடர்பில் வெகுவிரைவில் தீர்வு எட்டப்படும் எனவும் நீண்டகாலமாக அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களுக்கு வெகுவிரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் நேற்றுக்காலை 8 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றிற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதனையடுத்து வீமன்காமன் பகுதிக்குச் சென்ற அவர், அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அப்பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்டிருந்த எல்லை வேலியையும் பார்த்து அவ்விடத்தின் நிலைமைகளையும் ஆராய்ந்துள்ளார். அடுத்து கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள ஐனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டார்.
மேலும் வலி. வடக்கு எல்லைப்பகுதியான மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட ஒட்டகபுலம் புனித அமலோற்பவ மாதா ஆலயத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களைச் சந்தித்ததுடன் அவர்களுடைய பிரச்சினைகளையும் கோரிக்கை தொடர்பிலும் கலந்துரையாடினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நேற்றைய விஜயத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், வலி.வடக்குப் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சுகிர்தன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.