பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தொடர்பில் சர்ச்சை
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. அரசியல் கட்சிகளாக தாமும் செயற்படுவதாக விமல் வீரவன்ஸ,
சந்திரசிறி, கஜதீர, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஒருமித்து சபாநாயகரிடம் முறையிட்டதுடன் உண்மையான எதிர்க்கட்சியினரின் குரல்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
எனினும் பாராளுமன்றத்தை அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இவ்விடயத்தை திரும்பத் திரும்பவும் பேசிக்காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டினை எதிர்க்கிறேன் என்றும் கூறினார்.
எப்படி இருப்பினும் இவ்வார இறுதியில் இவ்விவகாரத்திற்கு தீர்வு ஒன்றை வழங்குவேன் என்று சபாநாயகர் கருஜயசூரிய இருதரப்புக்கும் உறுதியளித்தார். அத்துடன் எதிர்க்கட்சியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புடன் செயற்படுவேன் என்றும் கூறினார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்திற்கு முன்னரே மேற்படி சர்ச்சை ஆரம்பமானது.
விமல்வீரவன்ச
முன்னதாகப் பேசிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட ஐ.ம.சு.மு.பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கூறுகையில்,
பாராளுமன்றத்தில் நாம் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருக்கிறோம். ஆகவே பாராளுமன்றத்தினுள் எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். செயற்குழுக்களில் பாராளுமன்றக் குழுக்களில் எமது பங்களிப்புகள் உள்வாங்கப்படுதல் வேண்டும் என்பதுடன் எமது கருத்துவாதங்களை முன்வைப்பதற்கு உரிய நேர ஒதுக்கீடுகளை பெற்றுத்தருவதற்கும் சபாநாயகர் தலையீடு செய்து நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
லக்ஸ்மன்
கிரியெல்ல
இதனையடுத்து எழுந்து கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் கருத்து வெளியிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில், இங்கு எவரும் தனிக்கட்சியாக இல்லை. மாறாக
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தொங்கிக் கொண்டிருப்பவர்களே இங்குள்ளனர் என்றார்.
தினேஷ்
இதன்போதும் குழப்ப நிலை தோன்றியிருந்தது. இதற்கு மத்தியில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறுகையில்;
தற்போது உறுப்பினர்களால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை நான் ஆமோதிக்கின்றேன். இந்தப் பாராளுமன்றத்தை பல்வேறு அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அத்தகைய அரசியல் கட்சிகளுக்கே மக்களும் வாக்களித்துள்ளனர். இப்படியிருக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் பங்கேற்பதற்கு உரிமையுடையவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களை நசுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
பாராளுமன்றத்தை இங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக பிரதமரே ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார்.
இதன்போது எழுந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகையில், இப்படியானதொரு நிலைமைக்கு நானும் முகம் கொடுத்திருக்கிறேன். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு எதிர்ப்பு தெரிவிப்பவரே ஆளும் கட்சியின் பிரதமர் கொறடாவாக இருந்தார் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.
இதன்போது விமல் வீரவன்ச எம்.பி. குறிப்பிடுகையில்
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது அன்றைய ஆட்சியாளர்களுடன் இணைந்திருந்த ஜே.வி.பி. பின்னர் அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்ததுடன் சுயாதீனமாக செயற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.எதிர்க்கட்சியாக அமர்ந்து பாராளுமன்றத்துடன் அனைத்து செயற்பாடுகளிலும் பங்கேற்றிருந்தது.
அன்றைய செயற்பாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போது சபாநாயகர் எமக்கு பதிலளிக்க வேண்டும். செயற்படவும் வேண்டும் என்றார்.
இதனையடுத்து அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகையில்
இவ்விவகாரம் தொடர்பில் நாம் ஏற்கனவே தீர்மானம் ஒன்றுக்கு வந்துள்ளோம். இத்துறையில் மீண்டும் மீண்டும் அதே கதையைப் பேசிக்கொண்டிருப்பதை நான் எதிர்க்கிறேன். ஏனெனில் இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளே இருக்கின்றன என்றார்.
இறுதியில் பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய கூறுகையில் பாராளுமன்றத்தினுள் அனைத்து உறுப்பினர்களதும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளுக்கு பங்கம் ஏற்பட இடமளிக்கமாட்டேன். உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆலோசனைகளைப் பெற்று இவ்வாரத்தினுள் தகுந்த பதிலளிப்பேன் என்றார்.