Breaking News

இலங்கைக்கு அவசரமாக வந்தார் சீனாவின் சிறப்புத் தூதுவர்

சீனா அவசரமாக அனுப்பி வைத்துள்ள சிறப்புத் தூதுவர் நேற்று மாலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக, சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ சென்மின் நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார். அவருடன் உயர்மட்டக் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழுவினர் நேற்றுமாலை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன் போது, இலங்கையை தெற்காசியாவின் முக்கியமானதொரு நாடாக சீனா மதிப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கு, எல்லா உதவிகளும் வழங்கப்படும் என்றும், சீன உதவி வெளிவிவகார அமைச்சர் லிஜியூ சென்மின் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும், இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார். இதன் போது, சிறுநீரக நோயாளருக்கான மருத்துவமனையை அமைத்துத் தருவதான சீனாவின் வாக்குறுதி குறித்து, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனா உதவி அமைச்சருக்கு நினைவு படுத்தினார்.

அப்போது, இதுகுறித்து சீன அரச அதிகாரிகள் தற்போது சாத்திய ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகளை மீளத் தொடங்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சீனா அளித்த ஆதரவுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.