தமிழ் மக்களை தனியே பிரிந்து போகவிடுங்கள் : சுமந்திரன்
இலங்கை நாடு தனிச் சிங்கள நாடாக இருக்க வேண்டுமாயின் தமிழ் மக்களை தனியே விட்டு விடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இரண்டாவது நாளாக நடைபெற்ற போது உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ நாங்கள் தமிழர்கள். எமக்குச் சொந்த மரபுரிமை உள்ளது. சிங்கள மக்கள் மட்டும் இறைமையை அனுபவிக்க வேண்டும் என்றால் நாங்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நீங்கள்தான் கூறுகின்றீர்கள்.
இலங்கை சிங்கள தேசம் என்றும் நீங்கள்தான் கூறுகின்றீகள். எம்மைப் பிரிந்து போகுமாறும் நீங்கள்தான் கூறுகின்றீர்கள்.ஐ.நா. தீர்மானம் உங்களுடையது! நீங்கள் அதற்குச் சொந்தக்காரர்கள். எனவே, அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இறைமை என்பது ஒரு மக்கள் சமூகம் தம்மைத் தாமே ஆள்வதாகும். இங்கு ஒரு தரப்பினர் மட்டுமே இறைமையை அனுபவிக்கின்றனர்.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல தரப்பினர் இருக்கும் நாட்டில் அனைவரும் இறைமையை அனுபவிக்க வேண்டும். அதிக எண்ணிக்கை கொண்ட ஒரு தரப்பினர் மட்டும் இறைமையை அனுபவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.