கூட்டு ஒப்பந்த பேச்சு மீண்டும் தோல்வி - 1000 ரூபாவுக்கான போராட்டம் தொடர்கிறது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையும் எவ்வித இணக்கப்பாடுமின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஆறு மாதங்கள் நிறைவடைந்தும் இதுவரை புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. 1000 ரூபாவுக்கான போராட்டம் தொடர்கின்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காணமுடியாதிருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா அதிகரிப்புக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்த அதேவேளை, சம்பள அதிகரிப்பு தொடர்பில் எந்தவித சாதக சமிக்ஞைகளையும் காட்டவில்லை. அத்துடன் வரவுக் கொடுப்பனவை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் ஒப்புக்கொண்ட போதிலும் அடிப்படை சம்பளம் அல்லாத மேற்படி வரவுக் கொடுப்பனவை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்து விட்டனர்.
கடந்த நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போதும் இதேநிலையில் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றி தோல்விகண்ட நிலையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐந்தாவது சுற்றுப்பேச்சுவார்த்தையும் எவ்வத இணக்கப்பாடுமின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் அவர்களது நலன்புரி விடயங்களையும் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் அதனை புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதிலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. நெ்தவகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், சட்டத்தரணி எம். மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன், தேசிய அமைப்பாளர் எஸ்.பி. விஜயகுமார், தொழிலுறவு ஆலோசகர் ரி. நவரட்ண, பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எஸ். ராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முதரலாள்மார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தொழில் அமைச்சர் டபில்யு.டி. ஜே. செனவிரத்னவின் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பிலும் தற்போதிருக்கும் 620 ரூபா என்ற சம்பளத்தை 1000 ரூபாவாக மாற்றியமைப்பது தொடர்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கை குறித்து முதலாலிமார் சம்மேளனத்தினால் எவ்வித சமிக்ஞைகளும் ாட்டப்படவில்லை. அத்துடன் முதலாளிமார் சம்மேளனம் 1000 ரூபா கோரிக்கையை நிராகரித்துள்ளடன் வரவு நாற் கொடுப்பனவை 100 ரூபாவால் அதகரித்துத் தருவதாகவும் கூறியுள்ளது.
எனினும் அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பு இல்லாத வகையிலான வரவுக் கொடுப்பனவு அதிகரிப்பு தமக்குத் தேவையில்லையென தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் இழுபறியாக காணப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையும் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையும் இணக்கப்பாடில்லாது போனது. அத்துடன் திகதி குறிப்பிடப்படாத வகையில் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. கடந்தக்காலங்களில் சம்பள உயர்வு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18ஆம் திகதியும், மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22ஆம் திகதியும், நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ஆம் திகதியும் நடைபெற்றது.
பாராளுமன்றத் தோ்தல் நடைபெற்று 44 நாட்கள் கடந்த நிலையிலேயே நேற்று நடைபெற்ற பேச்சுவார்தையும் தோல்விக்கண்டுள்ளது.
முத்து சிவலிங்கம்
நடைபெற்ற பேச்சுவார்தை தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் சார்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் கூறுகையில்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்தை நேற்று தொழில் அமைச்சரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது அந்தவகையில் தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் நாம் உறுதியாக இருந்ததோடு இதனை எமது தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் முதலாலிமார் சம்மேளனத்திற்கு விளக்கினோம். எமது கோரிக்கைகளை முதலாலிமார் சம்மேளனம் ஏற்றுகொண்டதற்கிணங்க பேச்சுவார்தையில் முன்னெற்றம் ஏற்பட்டது. எனவே அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு ஒன்றை எதிர்பார்க்கலாம் என்றார்.
வேலாயுதம் ருத்ரதீபன்
கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் மற்றுமொறு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான வேலாயுதம் ருத்திரதீபன் கூகையில்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அடிப்படை சம்பளமான 1000 ரூபாவை நேற்றைய பேச்சுவார்தையிலும் நாம் வலியுருத்தினோம். வழமைபோல் இந்த கோரிக்கை முதலாளிமார் சம்மேளனத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே முதலாலிமார் சம்மேளத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு நேர கொடுப்பனவும் தொழிற்சங்கங்களினால் நிராகரிக்கப்பட்டது அந்தவகையில் எவ்வித தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் மீண்டும் திகதி குறிப்பிடாது பேச்சுவார்தை பிற்போடப்பட்டது என்றார்.