Breaking News

தமது ஆவணங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக டெஸ்மன்ட் டி சில்வா குற்றச்சாட்டு

காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிற்கு தாம் வழங்கிய சில ஆலோசனைகள் அடங்கிய ஆவணங்களை, தமது அனுமதியின்றி சிலர் எடுத்து நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முயன்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசனை குழுவின் தலைவர் சேர் டெஸ்மன்ட் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மக்ஸ்வல் பரணகமவின் வேறொரு அறிக்கை உள்ளதாகவும், பிரதமர் ரணில் அதனை மறைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டுவதற்காகவே அவ்வாறு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட ஆவணங்களின் பிரதிகள் தம்மிடம் உள்ளதால், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாம் எழுதிய இரகசியத்தன்மை வாய்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணங்கள் கையகப்படுத்தபட்டு இவ்வருட ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்கும் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், அதன் ஒரு பகுதியையே நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முயற்சி எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.