சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை ஒத்துழைக்கவில்லை – எரிக் சொல்ஹெய்ம்
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த 28ஆம் நாள் நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நோர்வேயின் அமைதி முயற்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஊடாக விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்கு வலியுறுத்தும் ஒரு நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
சரணடையும் விடுதலைப் புலிகளை ஏற்றி வருவதற்கு ஒரு கப்பலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு நகர்வுகளுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.
இதன் விளைவாகவே, வெள்ளைக்கொடியுடன் சரணடைய முனைந்தபோது, மரணங்கள் ஏற்பட்டன.” என்றும் அவர் குறிப்பிட்டார். எரிக் சொல்ஹெய்ம் தனது உரையில், இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட போது தாம் எதிர்கொண்ட நெருக்கடிகள்,சவால்கள் குறித்தும் விபரித்துள்ளார்.