தலைகீழாக மாறிய சர்வதேச நிலைப்பாடு- செ.சிறிதரன்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்,
சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்பதற்காக வலியுறுத்தப்பட்டு வந்த சர்வதேச விசாரணைக்கான சர்வதேச அளவிலான நிலைப்பாடு இப்போது தலைகீழாக மாறியிருக்கின்றது.
குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தினாலேயே உள்ளக விசாரணை பொறிமுறையின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் உறுப்பு நாடுகள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
சர்வதேச விசாரணை பொறிமுறையில் இருந்து கலப்பு விசாரணை பொறிமுறைக்கு மாறி, அதில் உறுதியாக இருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் உறுதியான நிலைப்பாடு, மனித உரிமைப் பேரவையின் இந்த முன்னெடுப்பு காரணமாக பயனற்றதாகியிருக்கின்றது.
இந்த நிலையில் கலப்பு விசாரணை பொறிமுறை, உத்தேச உள்ளக விசாரணை பொறிமுறை, இந்த பொறிமுறையில் எழக்கூடிய சிக்கலான விடயங்கள், விசாரணை முறைமை, சாட்சிகளின் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக மனித உரிமைகள் சட்டத்தரணி புவிதரன் அளித்துள்ள விளக்கங்களும் அவர் எழுப்பியுள்ள வினாக்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
வவுனியாவில் தமிழ் சிவில் சமூக அமையம் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு அரசியல் தீப்பொறிக்காக தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. விசாரணை
அறிக்கையின் பரிந்துரை
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையானது மிகவும் ஆரோக்கியமானதொன்றாகவும், இலங்கையில் 2002 இல் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்ற சம்பவங்களில், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளை விரிவாக ஆராய்ந்திருக்கின்றது.
இதன் மூலம், இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அதே போல் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது. அத்துடன் மிகவும் முக்கியமாக இலங்கையில் உள்ள நீதி நிர்வாகக் கட்டமைப்பு இதனைக் கையாள்வதற்கு தகுதி வாய்ந்தது அல்ல எனவும் எடுத்துக் காட்டியிருக்கின்றது.
ஆகவேதான், இந்த போர்க்குற்றம் அல்லது மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பவற்றை விசாரணை செய்வதற்கு ஒரு ஹைபிரிட் - கலப்பு விசாரணை பொறிமுறை ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐ.நா. விசாரணை அறிக்கை மனித உரிமைகள் பேரவைக்கு சிபாரிசு செய்திருக்கின்றது.
அமெரிக்காவின் பிரேரணை
இந்தப் பேரவையில் 3 வருடத்திற்கு ஒரு முறை உலக நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 47 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன.
இந்தப் பேரவையில் ஒரு விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்தப் பிரேரணையையே அமெரிக்கா கொண்டு வந்து, அதனை நகல் பிரேரணையாக சமர்ப்பித்திருக்கின்றது. இதனை நான்கு நாடுகளின் அனுசரணையுடன் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரேரணையின் முதல் நகல் வரைபுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன், அதன் முக்கிய சாராம்சங்களை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் மாற்றங்களைக் கோரியிருந்தது. அதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டு, இன்று உள்நாட்டு விசாரணை என்ற இடத்திற்கு இந்தப் பிரேரணை வந்திருக்கிறது.
ஐ.நா. விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஹைபிரிட் - கலப்பு விசாரணை பொறிமுறை என்பதை நீக்கிவிட்டு, பொது நலவாய நாடுகளின் நீதிபதிகளும் வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளிணைக்கப்படலாம் என்று இந்தப் பிரேரணையில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இதனையும் சிலர் ஹைபிரிட் முறைமைதான் என்று வாதிடலாம்.
ஹைபிரிட் சிஸ்டம் - கலப்பு
விசாரணை பொறிமுறை
ஹைபிரிட் சிஸ்டம் என்பது, இரண்டு விடயங்கள் கலந்த ஒரு கலப்புப் பொறிமுறையைக் குறிக்கின்றது. இந்த முறைமையிலான ஒரு விசாரணையை நடத்த வேண்டும் என்பதையே ஐ.நா. விசாரணை அறிக்கை பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் உண்மையாக உலகத்தில் இதற்கு முன்னர் நியூட்டன்பேக் ட்ரையல் சியாராலியோன், கம்போடியா, பொஸ்னியா, கிழக்குத் தீமோர் ஆகிய நாடுகளில் ஹைபிரிட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அனைத்து ஹைபிரிட் முறைகளிலும் அந்த முறைமையைத் தீர்மானிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேசம் ஒரு பங்காளராக இருந்தது. நீதிபதிகள் எத்தனை பேர் நியமிக்கப்பட வேண்டும், உள்ளூர் நீதிபதிகள் எத்தனை பேர் நியமிக்கப்பட வேண்டும், நடைமுறையை யார் சொந்தம் கொண்டாடுவது, இது யாருடைய கட்டுப்பாட்டுக்குட்பட்டது என்பன உடன்படிக்கைகளுக்கு ஊடாக இவற்றில் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
இந்த உடன்படிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அந்த நாட்டுக்கும் அல்லது ஐ.நா. பாதுகாப்புச் சபையுடன் செய்யப்பட்டிருந்தன. இதுதான் உலக நாடுகளில் பின்பற்றப்பட்டிருந்த உண்மையான ஹைபிரிட் சிஸ்டம் அல்லது கலப்பு விசாரணை பொறிமுறையாகும்.
ஆனால் இன்று எங்களுக்கு வரப்போவது அவ்வாறானதொன்று அல்ல. இலங்கை அரசாங்கம் முற்று முழுதாக அதனைத் தனக்குச் சொந்தமாக்கி, தனது செயற்பாட்டு முறைமைக்குள் கொண்டு வர முயற்சித்திருக்கின்றது, இதில் ஒன்றிரண்டு பொதுநலவாயம் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்வாங்கிக் கொண்டு செயற்படத்தக்க வகையிலான ஒரு முறைமையை அமெரிக்காவின் இறுதி நகல் பிரேரணை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாகவே, இலங்கை அரசாங்கமும் இந்தப் பிரேரணைக்கு அனுசரணையாளராக வருவதாகக் கூறியிருக்கின்றது. அந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இதனை நிறைவேற்றுவதற்கு, வாக்களிப்புக்கு விடத் தேவையில்லை. ஏனென்றால் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான எதிர்ப்புமின்றி அதனை ஏற்றுக் கொண்டு செயற்படப் போவதாகத் தெரிவித்திருக்கின்றது.
இந்த நிலைமையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையை வரவேற்றிருக்கின்றது. இதனை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு நாங்கள் முன்னோக்கி நகரலாம், அதே நேரத்தில் இது தொடர்பில் எங்களுக்கு வாக்களித்த சிலர் எதிர்ப்புக்களைத் தெரிவித்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டு முன் நகரவேண்டும் என்று சுமந்திரன் கூறியுள்ளார். இது தான் இன்றைய நிலைமை.
முரண்பாடுகள்
அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையின்படி, சர்வதேசப் பொறிமுறை என்பதும், சர்வதேசக் கண்காணிப்பு என்பதும் இதில் மிகவும் குறைந்தபட்சமாகவே காணப்படப்போகின்றன. ஐ.நா. விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், ஐ.நா. அறிக்கைக்கும் இந்த நகல் பிரேரணைக்கும் இடையில் பாரிய அக முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இலங்கையில் உள்ள நிர்வாகக் கட்டமைப்புகளால் இந்த விசாரணையை நடத்த முடியாது என்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது. ஆனால், அந்த விசாரணையை இன்று இலங்கை அரசாங்கத்திற்கே பொறுப்பு கொடுக்கின்ற தன்மை அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணையில் காணப்படுகின்றது.
இரண்டாவதாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் விடயத்தில், இலங்கை அரசாங்கம், மற்றும் விடுதலைப்புலிகள் ஆகிய தரப்புக்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
நியாயமான விசாரணை என்ற அடிப்படையில் நோக்கினால், உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பிலான விசாரணையை இந்த இரு தரப்புக்களில் எந்தவொரு தரப்பும் விசாரணை செய்கின்ற பொறுப்பை ஏற்றுச் செயற்பட முடியாது. இவ்விரு தரப்புக்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு வெளித் தரப்பே விசாரணையை நடத்த முடியும். அப்போதுதான் அது பக்கச்சார்பற்றதாகவும், நீதியை நிலைநாட்டக் கூடியதாகவும், நியாயமானதாகவும் இருக்க முடியும்.
ஆனால், இங்கு, குற்றம் சாட்டப்படுகின்ற ஒரு தரப்பை, அதாவது, தமிழ் மக்களால் இவர்கள் தான் எங்களுக்கு அநீதி இழைத்தார்கள் என்று கூறப்படுகின்ற அரசாங்கத் தரப்பை நீதிபதியாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இத்தகையதொரு வித்தியாசமான ஒரு விசாரணை பொறிமுறையை சர்வதேசத்தின் ஊடாக, இலங்கையின் பொறுப்பில் விடுவதற்கு அமெரிக்காவின் நகல் பிரேரணை மூலமாக ஆலோசனை முன் வைக்கப்பட்டிருக்கின்றது. அதனை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாகக் கருத வேண்டும்.
மிகவும் முக்கியமான விடயமாகக் கருதி அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும்.
விசாரணைகளை
மேற்கொள்ளப்போவது யார்?
அடுத்ததாக, இந்தப் பொறிமுறையின் ஊடாக கொண்டு வரப்படவுள்ள நீதிமன்றத்தின் முன்னால் அல்லது ஆணைக்குழுவின் முன்னால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களைக் கொண்டு வருவதற்கான விசாரணைகளை யார் மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பது இரண்டாவது முக்கிய விடயமாக இருக்கின்றது.
இந்த நாட்டில் உள்ள பொலிஸ் துறையினரோ அல்லது உளவுத்துறையினரோதான் பெரும்பாலும் இந்த விசாரணையாளர்களாக இருக்கப் போகின்றார்கள். இதுவரையில் உள்ள நிலைமைகளின்படி, சிலவேளைகளில் வெளிநாடுகளில் இருந்து ஒன்றிரண்டு விசாரணையாளர்களை இதற்கென கொண்டு வரலாம் என தெரிகின்றது.
இதனால், தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய தரப்பினரே எவ்வாறு விசாரணைகளை நடத்த முடியும் என்ற முக்கியமான பிரச்சினையும் தமிழ் மக்கள் முன்னால் இப்போது எழுந்து நிற்கின்றது.
குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய தரப்பாகிய இலங்கை அரசு விசாரணையாளராக இருப்பது என்பது பூரணமாக மாற்றப்பட வேண்டும்.
சட்டமா அதிபரின் பங்கு
அடுத்ததாக வரப்போகின்ற விசாரணைப் பொறிமுறையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தத் திணைக்களம் அரசாங்கத்தின் ஓர் அங்கமாகும். இலங்கையில் அது அரசாங்கத்திற்கு சட்டம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குகின்ற ஒரு நிறுவனமாகத் தொழிற்பட்டு வருகின்றது.
ஆகவே அரசாங்கத்திற்கு அரசாங்கத்தினுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கி, நெறிப்படுத்துகின்ற சட்டமா அதிபர் திணைக்களத்தை, அதே அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வழக்கொன்றை நெறிப்படுத்துங்கள் என்று எவ்வாறு கூற முடியும்? வரப்போகின்ற விசாரணை பொறிமுறையில் விசாரணைகளை நெறிப்படுத்துகின்ற பொறுப்பை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களமே ஏற்கப் போகின்றது.
இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
சர்வதேச பங்களிப்பு கொண்ட உடலகம ஆணைக்குழுவுக்கு நடந்தது என்ன?
இலங்கையில் உடலகம ஆணைக்குழு என்ற விசாரணை குழு நியமிக்கப்பட்டு, திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில முக்கியமான கொலைச் சம்பவங்களைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்வதேச நீதிபதியான நீதியரசர் பகவதி உட்பட மூன்று வெளிநாட்டவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இங்கு வழக்குத் தொடுநராகவும், வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குபவராகவும் சட்டமா அதிபரே செயற்பட்டிருந்தார். அப்போது, இவருடைய நடத்தைகள் தொடர்பில் மிகவும் அதிருப்தி தெரிவித்து மிகவும் காரசாரமான அறிக்கையொன்றை வெளியிட்டுவிட்டு பகவதி வெளியேறியிருந்தார். நியாயமான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவருடைய செயற்பாடுகள் தடைக்கல்லாக இருந்தன என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே இத்தகைய நிலைமையில், வரப்போகின்ற உள்ளக விசாரணை பொறிமுறையானது, சுயாதீனமான ஒரு தன்மையைக் கொண்டிருக்கும் என்று கூற முடியாது.
சுயாதீனமாகச் செயற்படுவதா?
ஏனெனில் சுயாதீனமாக செயற்படுவதென்பது, எனக்கு நெருக்கடிகள் இருக்கும்போது நான் சுயாதீனமாக இருக்க முடியாமற்போனது. ஆனால் இப்போது நெருக்கடிகள் இல்லை. ஆகவே, சுயாதீனமாக இருக்கின்றேன், சுயாதீனமாகச் செயற்பட வேண்டியிருக்கின்ற கடமைகளில் என்னை விடுங்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அதே போன்று நாளை நான் சுயாதீனமாக இருப்பேன் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே, இன்று நெருக்கடியான நிலைமைகளில் அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதற்காக இங்குள்ள அரச துறைகளும், கட்டமைப்புக்களும் சுயாதீனம் அடைந்திருக்கின்றன என்று கருத முடியாது.
மறுபக்கத்தில், சியாராலியோன் போன்ற
உதாரணங்களை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் போது, முதலில் அந்த நாடுகளுடைய அனுபவங்கள் வித்தியாசமானவை என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
கலப்பு விசாரணை பொறிமுறைகூட, தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஒரு சரிவராத முறைமையாகவே நான் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் இந்த ஹைபிரிட் முறைமை கொண்டு வரப்பட்ட நாடுகள் அனைத்திலும் அவற்றிலிருந்த அரசியல் கலாசாரமானது முற்று முழுதாக அதன் பின்னர் மாற்றமடைந்தது. அவ்வாறு மாற்றமடைவதற்கான ஓர் அரசியல் விருப்பு ஒன்று அங்கு இருந்தவர்களிடம் அப்போது ஏற்பட்டிருந்தது.
பொஸ்னியா, யுகொஸ்லாவியா போன்ற நாடுகளில் எல்லாம் நேட்டோ போன்ற நாடுகளினுடைய நெருக்குவாரங்களின் காரணமாகவே, அங்கு ஏற்பட வேண்டிய மாற்றங்களுக்கான நிலைமைக்குள் தள்ளப்பட்டு, அதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள இப்போதைய நிலைமைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த நிலைமைகள் இலங்கையில் இல்லையென்பதை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
இலங்கையின் நிலைமை வேறு
சியாராலியோன் ஒரு உள்நாட்டுப் பிரச்சினையைக் கொண்டிருந்தது.
ஒரு தனிக்கட்சி அரசியலில் இருந்து பலகட்சி மாற்றத்திற்கான ஒரு போராட்டமே அங்கு நடைபெற்றது. அப்போராட்டம் திடீரென வெடித்த ஒரு போராட்ட நிகழ்வில் இருந்து, தொடர்ந்து வந்து – அதாவது, 1995 ஆம் ஆண்டில் தொடங்கி 2002 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அங்கேயும் ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய பங்கை வகித்திருந்தது.
ஆனால் இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
அவர்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகவே கடந்த 60 வருடங்களாகப் போராடி வருகின்றார்கள்.
இந்த நிலையில், இங்கு இன்று வரைக்கும் தமிழ் மக்களினுடைய பக்கத்திலிருந்து நோக்கும்போது, இங்குள்ள அரசியல் கலாசாரத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டிருப்பதைக் காண முடியவில்லை. சிலர் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவே என சிலர் கூறலாம்.
அரசியல் கலாசார மாற்றம் ஏற்படவில்லை
ஆனால் அந்த மாற்றங்கள் எதுவும் தமிழ் மக்களுக்காக ஏற்பட்ட மாற்றங்களல்ல. அவற்றை தமிழ் மக்களுக்கான மாற்றங்களாகக் கருதவும் முடியாது. அவை உண்மையில் சிங்கள மக்கள் மீதான நெருக்குவாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களே. அந்த மாற்றங்கள் ஏற்படுவதற்காகத் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் மேற்கொண்டிருந்த வாக்களிப்பு முறையின் மூலம், அவர்களுக்கு உதவி செய்து அவர்களை நெருக்கடிகளிலிருந்து கை தூக்கி விட்டார்களோயொழிய, அவர்களுக்கான மாற்றங்களாக அவைகள் நிகழவில்லை.
தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்குவாரங்களில் மாற்றங்கள் ஏற்படுவதற்குப் பதிலாக, அவற்றை இல்லாமல் செய்யுமாறு கேட்ட போதெல்லாம் அந்த நெருக்குவாரங்கள் - நெருக்கடிகளுக்குள் மேலும் மேலும் அவர்களை ஆழ்ந்து போகச் செய்தார்கள். அந்த நிலையிலும், நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உதவியை, தமிழ் மக்களிடம் அவர்கள் கேட்டபோது, அதற்கு அவர்கள் உதவி செய்திருந்தார்கள்.
ஆனால் தமிழ் மக்களுடைய நெருக்கடிகளைக் குறைப்பதற்கோ இல்லாமற் செய்வதற்கோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மையான நிலையாகும்.
எப்படி முகம் கொடுக்கப் போகிறோம்?
எனவே, இலங்கையில் இருந்து வருகின்ற அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் எதுவும் நிகழாத ஒரு சூழலில், போர்க்குற்றங்களைப் புரிந்தார்கள் என்று இராணுவத்தினர் மீது தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சனல் 4 இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பின்னர் (அவற்றை இலங்கை அரசாங்கம் பொய்யானவை என்று மறுத்திருந்தாலும்) நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. அந்தப் பின்னணியில் ஐ.நா. விசாரணை அறிக்கை மேலும் உறுதியான ஆதாரங்களுடன் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்று ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்தான், இராணுவத்தினருடைய நற்பெயரை நிலைநாட்டுவோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூறியிருக்கின்றார்.
அரசியல் கலாசாரத்தில் உண்மையான மாற்றம் ஏற்பட்டிருக்குமேயானால், ஐ.நா. அறிக்கையில் ஏதோ சொல்லப்பட்டிருக்கின்றது, நாங்கள் அதனை விசாரிக்க வேண்டும் என்றாவது அவர் திறந்த மனதுடன் கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து எங்கள் இராணுவத்தின் நற்பெயரை நிலை நாட்டுவோம் என்று உலக அரங்கில் கூறுகின்ற நிலைமையில், ஒரு உள்நாட்டு விசாரணை பொறிமுறைக்குள்ளாக நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியுமா என்ற ஒரு கேள்வி எங்களுக்கு இருக்கின்றது.
இத்தகைய ஒரு சூழலில் பாராளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் இதனை ஏற்றுக்கொண்டிக்கின்றார்கள். அப்படி இருக்கும்போது, வரப்போகின்ற ஒரு நிலைமைக்கு நாங்கள் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றோம் என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
கட்டுப்பாடுகள் எதுவுமில்லை
அமெரிக்காவின் பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஒரு வாய்மொழி மூலமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர் எழுத்து மூல அறிக்கையொன்றையும் அவர் முன் வைக்க வேண்டும். இந்த இரண்டு செயற்பாடுகளுக்குமாக அவர் ஒரு மேற்பார்வையைச் செய்ய வேண்டியிருக்கும்.
அதனைத் தவிர, அமெரிக்க பிரேரணை வந்த பின்னர், இலங்கையின் விடயத்தில் சர்வதேசத்தின் அல்லது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நேரடியான எந்தவொரு ஈடுபாட்டையும் காண முடியவில்லை.
பொறுப்பு கூறுவதிலும், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சர்வதேசமோ அல்லது ஐ.நா. மனித உரிமைப் பேரவையோ இலங்கையை நேரடியாகக் கட்டுப்படுத்தத்தக்க அம்சங்கள் எதனையும் காண முடியவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கக் கூடிய கடப்பாடுகளும் காணப்படவில்லை.
சாட்சிகளின் பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்படுமா?
அடுத்தது சாட்சிகள் சம்பந்தமானது. இலங்கையில் விசாரணைகளை நடத்தும்போது, அவற்றில் சாட்சியமளிப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்களா என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது.
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் ஏற்படுத்தப்படப் போகின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது. இலங்கையில் உள்ள சட்டங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் அவைகள் பாரபட்சமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதுதான் பிரச்சினை. நியாயம் கேட்கும்போது ஏட்டில் எழுத்தில் உள்ள சட்டங்களைக் காட்டுவார்கள். ஆனால் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனை நாங்கள் பல வருடங்களாக நடைமுறையில் உணர்ந்து வந்திருக்கின்றோம்.
எனவே அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படப் போகின்ற சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படப் போகின்றது என்பதில் நியாயமான நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.
சாட்சிகள் விடயத்தில் இன்னுமொரு பக்கம் இருக்கின்றது. நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளாக இருக்கின்றார்கள். இவர்களில் குடும்ப உறவுகளை உற்றவர்களை இழந்தவர்கள் ஒரு பகுதியினர். மற்றும் ஒரு தரப்பினர் நேரடியாகப் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்தவர்களும், அவயவங்களை இழந்தவர்களும். இதைவிட இன்னும் ஒரு தரப்பினர் - அவர்கள் பாதிக்கப்படாதவர்கள்.
ஆனால் என்ன நடந்தது என்பதை சம்பவங்களை நேரடியாகக் கண்டு தெரிந்து வைத்திருப்பவர்கள்.
கண்கண்ட சாட்சிகள் வருவார்களா?
இவர்களில் பாதிக்கப்பட்டவர்களும், காணாமல் போனவர்கள் விடயத்தில் உறவினர்களும் சாட்சியமளிக்க முன் வருவார்கள். ஆனால் இங்கு நேரடியாக சம்பவங்களைப் பார்த்து தெரிந்து வைத்திருப்பவர்கள் சாட்சியமளிக்க முன் வருவார்களா என்பது கேள்விக்குரியது.
ஏனென்றால் சாட்சியாகப் போனால் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். தேவையற்ற அலைச்சல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றெல்லாம் எண்ணி அவர்கள் அஞ்சுவார்கள். இவ்வாறு அஞ்சி ஒதுங்கியிருக்கின்ற ஒரு வழமை எம் மத்தியில் எமது சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருகின்றது.
மிகவும் பாரதூரமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில், அந்தப் பாதிப்புகளுக்கு நீதி கோருவதற்காக இவர்கள் முன்வருவார்களா என்பது சந்தேகமே. பாதிக்கப்பட்டவர்களே சாட்சியமளிக்கும்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும்போது – அவர்களின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்படாத நிலையில் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும்.
விசாரணையின் முக்கிய அம்சமாகிய சாட்சிகள் விடயத்தில் இவ்வாறான நிலைமைகள் இருக்கும்போது, விசாரணைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மேலாக இழுத்தடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறும் காணப்படுகின்றது. விசாரணைகளை இழுத்தடிப்பதற்கு இலங்கை அரசாங்கத் தரப்பினர் தயங்கமாட்டார்கள் என்பது எங்களுக்கு ஏற்கனவே அனுபவ ரீதியாகத் தெரிந்த விடயம் ஆகவே, இவ்வாறான நடைமுறைச் சூழலில் இந்த உள்ளக விசாரணை எந்த அளவுக்கு வெற்றிகரமாக முன்நோக்கிக் கொண்டு செல்லப்படும் என்பதிலும் கேள்விகள் இருக்கின்றன.
நீதித்துறையில் மாற்றங்கள் வருமா?
இன்னுமொரு முக்கியமான விடயம் - பொதுநலவாய நீதிபதிகள் அல்லது வெளிநாட்டு விசாரணையாளர்கள் ஒன்றிரண்டு பேரை இலங்கை அரசாங்கம் தனது உள்ளக விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்கினாலும், அவர்கள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு சட்டங்களை, சட்ட விதிகளை, சட்ட நடைமுறைகளை எப்படி உள்வாங்குவது என்ற சட்டப்பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
அவற்றை உள்வாங்குவதற்காக இலங்கையின் நீதித்துறையில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு செய்யப் போகின்றது என்பது தெரியவில்லை.
இந்த விசாரணை பொறிமுறையில் விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படப் போகின்றார். அவ்வாறு நியமிக்கப்பட்டால் அவருடைய அதிகாரங்கள் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
மேன்முறையீடு செய்வது எப்படி?
அதேநேரம், இந்த விசாரணைகளில் வரக்கூடிய மேன்முறையீடுகள் எங்கே செல்லப் போகின்றன என்பது மற்றுமொரு முக்கிய விடயமாகும். இந்த மேன்முறையீடுகள் இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் உள்ள சாதாரண நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுமா அல்லது அதற்கென விசேட நீதிமன்றங்கள் உருவாக்கப்படுமா என்பது தெளிவில்லை.
மேன்முறையீடுகள் செய்ய வேண்டிய தேவையொன்று வரும்போது, எங்களுக்கென 2500 வருடங்களுக்கு மேலான நீதிப்பாரம்பரியத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம், எங்களுடைய நீதிமன்றங்களிலேயே அவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று அரசாங்கம் சொல்லக் கூடும்.
அப்போது சர்வதேசமும் அதனை ஏற்றுக்கொண்டு ஆம் என்று தலையாட்டக் கூடும். அப்போது – பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இப்போதுள்ளது போன்று – அந்த மேன்முறையீட்டு வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்படலாம்.
ஆணையிட்டவர்கள் பொறுப்பு கூறுவார்களா?
சாட்சிகள் மற்றும் விசாரணை முறைமைகள் இவ்வாறிருக்க, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பிலும் சிக்கல்கள் இருக்கின்றன.
குற்றம் சுமத்தப்படுகின்ற சாதாரண சிப்பாய் தரத்திலானவர்கள் இந்த உள்ளக விசாரணை பொறிமுறையின் கீழ் விசாரணை செய்யலாம். ஆனால் ஆணையிட்டவர்களின் பொறுப்பு என்ற நிலையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கட்டளை அதிகாரிகள் விசாரணை செய்யப்படுவார்களா அல்லது அவர்களை விதிவிலக்காகக் கொண்டு இராணுவத்தினரின் சிப்பாய் தரத்திலானவர்களை விசாரணை செய்வதுடன் இந்த விசாரணைகள் நிறுத்திக்கொள்ளப்படுமா என்பதும் முக்கிய கேள்வியாக எழுந்திருக்கின்றது.
எனவே, உள்ளக விசாரணை என்பது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்கத்தக்கதாகவே காணப்படுகின்றது. இவற்றின் ஊடாக ஓரளவுக்காவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே.