Breaking News

இராணுவத்தால் கடத்தப்பட்டவர்களை கொலை செய்ததாக பிள்ளையான் வாக்குமூலம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டவர்களை தாமே கொலை செய்ததாக பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் இதுபோன்ற பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த நபர்களை கொலை செய்வதற்கான காரணம் தனக்கு தெரியாதெனவும் கிடைக்கின்ற ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டதனை மாத்திரமே தான் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினர் ஊடாக கைது செய்யப்பட்டு குறித்த நபர்களை தன்னிடம் ஒப்படைப்பதாகவும், பின்னர் இராணுவ புலனாய் பிரிவினருடன் இணைந்து தான் செயற்பட்டதாகவும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் அவர் இன்னமும் சில தகவல்களை மாத்திரமே வெளியிட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

ஏனைய சம்பவங்கள் தொடர்பில் தனக்கு தெரியாதெனவும், அந்த தகவல் வேறு சிலருக்கு மாத்திரமே தெரியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், முன்னாள் அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்களை வெளியிட்டிருந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.