பிச்சைக்காரனுக்கு அதிஷ்டமடித்தது போன்றதே ரணில் பெற்ற வெற்றி : உதய கம்மன்பில
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்க பிரதமராகியமை, பிச்சைக்காரன் ஒருவன் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற்றமைக்கு ஒப்பான செயல் என்று தூய (பிவிதுரு) ஹெல உறுமயவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“பிச்சைக்காரன் ஒருவன் திடீரென சீட்டிழுப்பில் வெற்றிப் பெற்றால், தன்னிடம் மாத்திரமே பணம் உள்ளது என எண்ணி இறுமாப்புடன் செயற்படுவான்.“ அதை ஒத்ததே ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய செயற்பாடுகள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் மிகவும் நாகரீகமற்ற முறையில் கலந்துரையாடி வருகின்றார். எனவே, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராளுமன்றத்தை பார்வையிட வருவதாக இருப்பின், பிரதமர் பாராளுமன்றத்தில் இல்லாத நாட்களை தெரிவுசெய்து வருகை தாருங்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயமாகியிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகள் மிகவும் அமைதியான முறையில் சிறப்பாக நடைபெற்றது.” என்றுள்ளார்.