முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா?
மாட்டிறைச்சி சாப்பிட்டதாக எழுந்த வதந்தியை அடுத்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக கிளம்பியுள்ள சர்ச்சையையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக முதன்முறையாக கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா? வறுமையை எதிர்த்து போரிட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் இக்லாக் என்ற இஸ்லாமியர் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இடையே கருத்து மோதலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், இந்த சம்பவத்தைப்பற்றி நேரடியாக குறிப்பிடாமல், நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தாத்ரி சம்பவம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தனது மவுனத்தை கலைத்தார்.
பீகாரில், நவாதா என்ற இடத்தில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், தாத்ரி சம்பவம் பற்றி நேரடியாக கூறாமல், ‘அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு முன்னேறும்’ என சுட்டிக் காட்டினார். அவர் கூறியதாவது:–
நமது நாடு எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை நான் இதற்கு முன்பும் கூறி உள்ளேன். வறுமையை எதிர்த்து போரிட வேண்டுமா? முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டுமா? என்பதை இந்துக்கள் முடிவு செய்ய வேண்டும்.
இந்துக்களை எதிர்த்து போரிட வேண்டுமா? வறுமையை எதிர்த்து போரிட வேண்டுமா? என்பதை முஸ்லிம்கள் தீர்மானிக்க வேண்டும். இரு தரப்பினரும் இணைந்து நின்று, வறுமையை எதிர்த்து போரிட வேண்டும்.
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து, வறுமைக்கு எதிராக போரிட்டால்தான், இந்த நாடு பலன் பெற முடியும். ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், சமாதானம் ஆகியவைதான் இந்த நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.
சில அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக பொறுப்பற்ற விதத்தில் பேசி வருகிறார்கள். அத்தகைய பொறுப்பற்ற பேச்சுக்களை, யார் பேசினாலும், ஏன், நரேந்திர மோடியே பேசினாலும் கூட, நீங்கள் அவற்றுக்கு செவி சாய்க்க வேண்டியதில்லை. அவற்றை காது கொடுத்து கேட்காமல் புறக்கணித்து விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.