Breaking News

இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எக்னெலிகொட – விசாரணையில் உறுதி

காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கிரித்தல இராணுவ முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது உறுதியாகியிருப்பதாக,  குற்றப்புலனாய்வுத் திணைக் களம் தெரிவித்துள்ளது.


2010ஆம் ஆண்டு ராஜகிரியவில் கைது செய்யப்பட்ட பின்னர், கிரித்தல இராணுவ முகாமிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரே அவர் காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார்.

கிரித்தல இராணுவ முகாமில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது, தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் புலிகள், இராணுவ அதிகாரிகள், மற்றும் முன்னாள் படையினர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்களையும் அங்கு கொண்டு சென்று விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய நான்கு சந்தேக நபர்களும், வரும் 13ஆம் நாளுக்குள், கிரித்தல இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக, இலங்கை காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர்கள், பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட பின்னர், காணாமற் போவதற்கு முன்னதாக, இந்த முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிரித்தல இராணுவ முகாமில்,  வரும் 13ஆம் திகதி வரையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.