தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு த.தே.கூ ஒத்துழைப்பு வழங்கும்: செல்வம் எம்.பி
நீண்டகாலமாக வழங்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் என்ன முடிவெடுத்துள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை.
அவ்வாறான நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவளிக்கும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியிருந்தார். எனவே, கைதிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திப்பதற்கு அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியை கூடிய விரைவில் சந்திப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரோ அல்லது வேறுயாரோ என்ன பதிலைச் சொன்னாலும் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியே இறுதி முடிவைச் சொல்ல வேண்டும் என்றும் வெல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.
ஏனெனில், அவருடைய உறுதிமொழியை நம்பியே கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். அரசாங்கம் வழங்கும் முடிவை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் போராட்டத்தைத் தொடரவேண்டி ஏற்படும் என கைதிகள் கூறியுள்ளனர். அவ்வாறான போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.