சர்வதேசம் சாராத விசாரணை என்பதை அரசு நிரூபிக்கவேண்டும் - விமல்வீரவன்ச கடும் விசனம்
இலங்கையில் இடம்பெறப்போவது சர்வதேசம் சாராத உள்ளக விசாரணை என்பதை அரசாங்கம் தகுந்த சாட்சியங்களுடன் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் உண்மைக்கு புறம்பாக கருத்து வெளியிட்டமைக்காக மக்களிடம் தற்போதைய ஆட்சியாளர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் யுத்த குற்றம் தொடர்பிலான அறிக்கைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தனவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது தமது சமஷ்டி இலக்கை நெருங்கியுள்ளது.அதனால் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டை காத்த இராணுவத்தினரை காட்டிக்கொடுத்து விட்டு நாடு திரும்புகின்றமைக்கு கூட்டமைப்பின் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை ஜயந்திபுரவில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும தெரிவிக்கையில்,
இலங்கையில் யுத்த குற்றம் இடம் பெற்றது என குறிப்பிடும் ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் அறிக்கையின் பிரகாரம் இலங்கையுடன் கைகோர்த்து சர்வதேசம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில் பேரவையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படாமல் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.தற்போது அரச ஊடகங்களிலும் ஜெனீவா மாநாடு பற்றி பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் உள்ளக விசாரணை இடம்பெறும் என்று கூறுபவர்கள் முட்டாள்களாகவே இருப்பர்.குறித்த அறிக்கையில் இங்கு அமைக்கப்படும் நீதிமன்றத்திற்கும் ஆலோசனைக் குழுவுக்கும் பொதுநலவாய நாடுகள் மற்றும் அது தவிர்ந்த ஏனைய நாடுகளின் நீதிபதிகளை வரவழைப்பதற்கே தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆனால் அரசாங்கம் அதனை மறைக்க தற்போது ஆலோசனை குழுவில் மட்டுமே சர்வதேச நீதிபதிகள் இருப்பதாக தெரிவிக்கின்றது. இது உண்மைக்கு புறம்பான கருத்தாகும்.
இது எந்த வகையிலும் உள்ளக விசாரணையாக இடம் பெறாது என்பதை அல் ஹுசைனின் அறிக்கை வெளிப்படுத்துகின்றது. ஆனால் அரசாங்கம் இதனை ஏன் மக்கள் மத்தியில் மறைக்கின்றது என்பது கேள்விகுறியாகவே உள்ளது.அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டினால் எமது நாட்டு நீதிபதிகளுக்கு இருக்கின்ற தனித்துவமும் இல்லாது போய்விடும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் 22 இராணுவ உயர் அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டு ஜெனிவா மாநாட்டில் காட்டிக்கொடுத்துவிட்ட பின்னர் தற்போது பிரதமர் ரணிலும் அமைச்சர் சம்பிக்கவும் மேற்குறித்த 22 இராணுவ உயர் அதிகாரிகளையும் அழைத்து அவர்களை காப்பாற்றுவதாக ஆறுதல் கூறிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியும் தற்போது இவர்களுடன் கைகோர்த்துள்ளது.
இவ்வாறு காட்டி கொடுத்த பின்னர் நாட்டிற்கு வரும் ஜனாதிபதிக்கே நாட்டை காப்பாற்றி விட்டார் என்ற பெயரில் புகழாரம் சூட்டப்படுகறது. மஹிந்தவை காட்டிக் கொடுத்து ஐ.நா.விடம் தலைகுனிந்து நின்று அமெரிக்காவின் பிரேரனைக்கு முகம் கொடுத்தமை குறித்து தற்போதைய ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். ஐ.நா. அறிக்கை 1983 ஆம் வெளியிடப்பட்ட போது அதற்கு எமது நாட்டின் சுயாதீன தன்மை பாதிக்காத வண்ணம முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன் முகம்கொடுத்தார் அவ்வாறனவர்களிடமிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜே.ஆர்.ஜயவர்தனவிடமிருந்து அவர் தவறான பாடங்களைக் கற்றுக்கொண்டால் போதாது. அவரிடம் உள்ள நல்ல குணங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். 1983 ஆம் ஆண்டே முதல் முறையாக இலங்கை தொடர்பில் ஐ.நா.வில் பேச்சுவார்த்தை இடம் பெற்றது. அதில் இலங்கையில் சிறுபான்மைக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துக் காணப்படுதாக தெரிவிக்கப்பட்து. அதுவே இலங்கை மீது உள்ள வலுவான குற்றச்சாட்டாக இருந்தது. இன்றும் அதுவே உள்ளது. ஆனால் அந்த நெருக்கடியான சூழழிலும் ஜே.ஆர் .அரசாங்கம் வடமராட்சியை கைப்பற்றுவதை நோக்காக வைத்துக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தது.
அது மட்டுமன்றி ஜே.ஆர்.ஜயவர்தன இலங்கை மீது மட்டும் குற்றம் சாட்டாமல் மக்களை வதைக்கும் புலிகள் மீதும் விசாரணை நடத்துங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதற்கு முற்றிலும் மாறாக அமெரிக்காவின் தேவைக்கு ஏற்ப செயற்படுகின்றது. இதற்காக தான் தற்போது எதிர்கட்சி தலைவர் சம்பந்தனும் ஜனாதிபதி நாட்டை சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றிவிட்மை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்மைப்பு போன்ற பிரிவினைவாத கட்சிகள் தமது சமஷ்டி இலக்கை அண்மித்துள்ளன .அதற்காகவே அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர் பிரேரணை எமது நாட்டுக்கு வெற்றியளிப்பதாக அமையும் என்று பொய் நாடகம் காண்பித்துக் கொண்டிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் மக்கள் மத்தியில் பகிரங்கமாக நாட்டை காட்டி கொடுத்தமைக்கு மன்னிப்பு கோர வேண்டும்.
சிறுபான்மையை பாதுகாப்பதாக கோரி தமக்கு அடிபணியாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்கவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முயற்சிக்கின்றது என்றார்.