தமிழர் எதிர்பார்க்கும் தீர்வை பேச்சுவார்த்தை மூலம் பெறலாம்! - சம்பிக்க
மஹிந்த அரசாங்கம் விட்ட தவறுகளை நிவர்த்திசெய்யும் வகையில் எமது பிரதமர் செயற்பட்டு வருகின்றார். எமது வெளிநாட்டு கொள்கைத்திட்டம் மிகத்தெளிவானது. ஆகவே இனிமேல் சர்வதேசத்தினால் எமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்படுத்திக்கொள்ள முடியும். உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சர்வதேச மன்றத்தில் நிற்கவேண்டிய அவசியம் இனி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக அரசாங்கம் சர்வதேச தரப்புகளிடம் வாக்குறுதி கொடுத்துவரும் நிலையில் அதுதொடர்பில் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்று வினாவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
எமது நாட்டில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாமே தீர்வு காணவேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
எனினும் இந்த செயற்பாடுகளுக்கு நாம் சர்வதேச உதவிகளையும் அவர்களது ஆதரவையும் பெற்று செயற்பட தயாராக உள்ளோம். ஆரம்பத்தில் இருந்தே நாம் உள்ளக பொறிமுறைகளை சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று எமக்கு எதிரான பிரச்சினைகளை தீர்த்திருக்க முடியும். இன்றும் உள்ளக பொறிமுறைகளுக்கு அமைய அனைத்து விசாரணைகளையும் முன்னெடுத்திருந்திருக்க முடியும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவும் அவரது கூட்டணியும் செய்த அடக்குமுறை செயற்பாடுகள் மற்றும் அவர்களது வெளிநாட்டு கொள்கைகள் என்பனவே இன்று நாம் இவ்வாறானதொரு சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சர்வதேச விசாரணைகள் நாட்டை பிரிப்பதாக கூறிக்கொண்டு வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் ஏனைய நாடுகளுடன் மறைமுக ஒப்பந்தங்களை மேற்கொண்டது மஹிந்த அணியினரேயாகும். இங்கு இனவாதம் பேசிக்கொண்டு வெளிநாடுகளுக்கு கடிதங்களை அனுப்பி அவர்களை ஏமாற்றியதும் இவர்களது வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டுமேயாகும். அவ்வாறு இருக்கையில் எமது அரசாங்கம் அவற்றை நிவர்த்தி செய்து மிகச் சரியான சர்வதேச அரசியல் கொள்கையை கையாண்டு வருகின்றது.
இப்போதும் எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது வெளிநாட்டு விஜயங்களின் போது முன்னைய அரசாங்கம் விட்ட தவறுகள் அனைத்தையும் நிவர்த்திசெய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அதேபோல் சர்வதேச உதவிகளை நாட்டுக்கு கொண்டுவரும் வகையில் எமது வெளிநாட்டு கொள்கையும் அமையப்பெற்றுள்ளதனால் இப்போதிருக்கும் நிலையில் சர்வதேசத்தினால் எமக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
அவ்வாறு இருக்கையில் இப்போது நாம் கவனிக்கவேண்டிய பிரதான விடயம் நாட்டில் அரசியல் தீர்வை மேற்கோள்வதேயாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கடந்த கால சூழலையும் சம்பவங்களையும் கவனத்தில் கொண்டும் கடந்த ஆட்சியில் அரசாங்கம் விட்ட தவறுகள் மற்றும் மேற்கொண்டிருக்க வேண்டிய செயற்பாடுகளை முக்கியப்படுத்தி எதிர்வரும் காலத்தில் மீண்டும் இந்த நாட்டில் ஒரு இனவாதமாகவோ அல்லது அரசியல் ரீதியிலோ சிக்கல் நிலைமை ஏற்படாத வண்ணம் ஒரு அரசியல் தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். பிரதமரிடம் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவ்வாறானதொரு மாற்றத்தையே விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் செயற்பட்டதைப்போல் அல்லாது இப்போது மாறுபட்ட வகையில் நாட்டுக்குள் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புகின்றனர். ஆகவே பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்ற நிலைப்பாடு இப்போது இரண்டு தரப்பிடமும் உள்ளது. ஆகவே இனிமேலும் இலங்கையில் பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச மன்றங்களில் போய் நிக்கவேண்டிய தேவை ஏற்படாது என அவர் குறிப்பிட்டார்.