அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைக்காது - வாசுதேவ தெரிவிப்பு
நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிப்பார்கள் என நேற்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மலைய தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மாவுக்கான மானியத்தை வழங்கி நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு அரிசி மாவிலான பாணை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்தியாவில் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 1 வீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. அத்துடன் வறுமையில் வாழும் மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனைத்தான் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
வெளிநாடுகளில் பாண் ஒரு இறாத்தலின் விலை 400 ரூபாவாகும். "பிரெட் டோக்கிலும்" இங்கு மேற்கண்ட விலையில்தான் பாண் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே நெல்லுக்கு நியாயமான விலை கொடுத்து வாங்க வேண்டும், விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் அரிசி மா மூலம் பாண் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தி நாட்டில் அரிசி மா பொருட்களை மக்களின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
அதேவேளை மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா மானிய விலையில் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து கொள்ள முடியாது பரிதவிக்கின்றனர். ஆனால் நெல் கொள்வனவு செய்யும் முதலாளிமார் செல்வந்தர்களாக மாறுகின்றனர்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் நெல்லுக்கும், தேயிலைக்கு, இறப்பருக்கு கட்டுப்பாட்டு விலை கொடுத்து விற்கப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் தேயிலைக்கும் இறப்பருக்கும் சிறந்த விலை கொடுப்பதாக கூறி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்தார்கள்.
இந்த ஆட்சிக்கு எதிராக மக்களின் போராட்டங்கள் வெடிக்கும். இந்த ஆட்சி தொடர்ந்தும் நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்படும் என்றார்.