Breaking News

பாலியல் இலஞ்சம் கோரிய விவகாரம் – குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்கிறது செஞ்சிலுவை சங்கம்

இந்தியாவின் வீடமைப்பு திட்ட உதவி நிதியைப் பெறுவதற்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியதாக, முழங்காவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக இரண்டு கட்டங்களாக தாம் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், இது தொடர்பாக, குற்றச்சாட்டை சுமத்திய பெண், மற்றும் 9 செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளில், இந்திய தூதரக அதிகாரிகளும் ஈடுபட்டதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

எனினும், இந்த விசாரணைகளில் குறிப்பிட்ட பெண் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனினும், மேலதிக நடவடிக்கைக்காக இந்த விசாரணை அறிக்கை மற்றும் அதுபற்றிய ஆவணங்கள் அனைத்தும், சட்டம் ,ஒழுங்கு அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.