சாட்சிகளை பாதுகாக்க வடக்கு, கிழக்கில் ஐ.நா அலுவலகங்களை அமைக்க வேண்டும்
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விவாதத்தில் அன்புமணி பேசியது குறித்து அந்தக் கட்சி சார்பில் புதன்கிழமை கூறப்பட்டதாவது: போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு, அதன் குற்றங்கள் தொடர்பாக விசாரித்து தீர்ப்பளிக்க தார்மீக உரிமை இல்லை.
இலங்கையில் தமிழர் வசிக்கும் கிராமங்களில் இன்னும் இராணுவ முகாம்கள் உள்ளன. தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழும் சூழல் உள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வளையங்கள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன. எனவே, இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை.
இது தொடர்பாக தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா அமைதி காப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மகாணங்களில் கிளை அலுவலங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.